Close
செப்டம்பர் 20, 2024 8:40 காலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக காசநோய் தின கருத்தரங்கம்

புதுக்கோட்டை

கோமாபுரத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் நடத்திய உலக காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை கிளை ஒருங்கிணைப்பில் காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு முனியய்யா தலைமையில் நடந்தது.

இதில் ஆசிரியர் பயிற்றுனர் ராஜேஸ்வரி, செவிலியர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது: உலகம் முழுவதும் காச நோய் பரவல் குறைந்து, காசநோய் பாதிப்புகள் இல்லாத உலகமாக வேண்டும், எனவேஅதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24 -ஆம் நாள் உலக காச நோய் விழிப்புணர்வு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

காச நோய் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஒரு தொற்று நோயாகும். ஒருவரிடமிருந்து மிக எளிதாக தும்மல், இருமலில் இருந்து வெளிப்படும் திரவங்களின் வாயிலாக பரவுகிறது எனவும் இதன் பரவும் முறை, அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

​முதன் முதலாக காசநோய் 1882 ல் டாக்டர் ராபர்ட் ஹோச் என்பவரால்பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றால் இந்நோய் உண்டாவதாகக் கண்டறிந்தார்.​டிபி, காசநோய், எலும்புருக்கி நோய் என பல பெயர்களில் அழைக்கப்படும் இது மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிஸ் என்னும் பாக்டீரிய நுண்கிருமிகளால் உருவாகிறது.

இதன் தாக்கம் நுரையீரல் முதல் ஒட்டுமொத்த நரம்பு மண்டலம், இரைப்பை மற்றும் குடல் பகுதியையும் பாதிக்கும் தன்மை கொண்டது. உலக சுகாதார நிறுவனம் 1993 ஆம் ஆண்டு இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் “நீடித்த வளர்ச்சியின் கீழ் 2030 -ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் காசநோயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் இந்தியாவில் காசநோய் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

பின்னர் அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகள் குறித்து பேசினார்.

நிகழ்வில் ஆசிரியர்கள் குமரேசன், செல்வராஜேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் சந்திரமோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top