Close
செப்டம்பர் 20, 2024 7:39 காலை

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வேண்டும்: தாளாண்மை உழவர் இயக்கம் கோரிக்கை

தஞ்சாவூர்

தாளாண்மை உழவர் இயக்கத்தின் சார்பில் அம்மாபேட்டை மக்கள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கம்

குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்க வேண்டுமென நடைபெற்ற தாளாண்மை உழவர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தாளாண்மை உழவர் இயக்கத்தின் சார்பில் அம்மாபேட்டை மக்கள் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கருத்தரங்கில்   குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்க பட வேண்டும், மானாவாரி நிலங்களின் தண்ணீர் பிரச்னை, விவசாயிகளுக்கு தேவைப்படும் கட்டுமானம், சேமிப்பு விற்பனை வசதிகள் என்கின்ற தலைப்புகளில் கருத்தாளர்களின்  உரை வீச்சு நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு சமவெளி விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், பொறியாளர் சு.பழனி ராஜன் தலைமை வகித்தார் .இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் வரவேற்புரையாற்றி னார் .

மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, பயன் படுத்துவது தொடர்பாக திருச்சி நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் பொறியாளர் ம.சேகர் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்தால் அறுபது டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மானாவாரி நிலங்களில் குறுக்கு உழவு செய்தால் நீரை அதிகமாக சேமிக்கலாம்.

மானாவாரி நிலங்களின் மீது காய்ந்த தளைகள், சருகுகள் போட்டு மூடி வைக்கும் போது நிலத்தடி நீர் வெப்பமாகி, ஆவியாக செல்லாமல், நீரை பாதுகாக்கும். நிலத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். மண் வளத்தை பெருக்கும். உரமாக்கும். நுண்ணுயிர்கள் பெருகும். விளைச்சல் அதிகமாகும் . அரசு வழிகாட்டுதலோடு விவசாயிகள் இத்தகைய செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

அரசின் வேளாண்மை துறை, நீர்வளத் துறை மூலமாக அனைத்து மானாவாரி நிலங்களையும் உழுது வைக்க வேண்டும், அதற்கான முன் முயற்சிகளை சம்பந்தப்பட்ட துறைகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 39,002 குளம்,குட்டை, ஊரணிகள், ஏரிகள் உள்ளிட்டு மொத்தம் 42,000 நீர்வள ஆதாரங்கள் உள்ளது. பருவ மழை காலங்களின் போது கடலில் வீணாகச் செல்லும் மழை நீரை குளம், ஏரிகளில் சேமித்து வைக்க வேண்டும். கோடைகாலத்தில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும், கோடைப் பயிர் சாகுபடிக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

எனவே 42 ஆயிரம் குளம், குட்டை, ஏரி உள்ளிட்டு அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும், அகலமாக்கி,ஆழப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கல்லணை, கொள்ளிடம் உள்ளிட்டு 114 அணைகள் உள்ளது, இந்த அணைகளில் ஒரு அடி நீர் தேக்கினாலே 200 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் பொருட்டு அரசு, மற்றும் பொதுப்பணித்துறை இதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 நிகழ்வில் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, பொதுப்பணித்துறை ஓய்வு ,பொறியாளர் அ.இராசாராமன்,. மக்கள் அதிகாரம். மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம் உள்ளிட்டர் பங்கேற்று பேசினார்கள்.

நிகழ்வில் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக விவசாய சங்க தலைவர் இ.சரவணமுத்துவேல், ஜனநாயக விவசாய சங்க தலைவர் கசி.விடுதலைகுமரன், அருண் பிரசாத், தொழிலாளர் ஒற்றுமை இயக்க தலைவர் அ.பாஸ்கர் ,எழுத்தாளர் சாம்பான், மக்கள் கலை இலக்கிய கழக இணை பொதுச்செயலாளர் ராவணன்,சமூக ஆர்வலர்கள் ஒரத்தநாடு வெங்கடேசன், வழக்கறிஞர் அருணா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கத்தில், ஒன்றிய,மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக வேண்டும். ஏழாவது ஊதியக்குழு ஆணையின்படி இந்திய அரசின் கடைநிலை ஊழியர்களுக்கு தரப்படும் சம்பள உயர்வுக்கு சமமாக உயர்த்த வேண்டும்.

நெல் கொள்முதல்  விலை உயர்த்தப்பட வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 8,343 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் கட்டுமானத்திற்கு ஒதுக்கிய நிதி போதாது. கூடுதலான நிதியினை வேளாண்மை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் மழை நீர் மற்றும் பனி பொழிவால் வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்.  அதேபோல பாசனத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.  விளைவிக்கின்ற உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க கிடங்குகள், குளிரூட்டப்படும் அறைகள் போதுமான அளவிற்கு கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top