ஈபிள் கோபுரத்தின் இரண்டாவது தளம் வரை ஏறிப்பார்த்து , பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்க,ஒரு தடவை வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. 134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இந்த கோபுரம் இன்றைய நாளில் தான் திறக்கப் பட்டது.
இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக ஸ்தலங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம். ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும் உல்லாசப் பயணிகள் தொகை சுமாராக 7 மில்லியன்.
1789 -இல் பிரெஞ்சு புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட 1889 -இல் ஒரு உலகளாவிய கண்காட்சி பாரிஸ் நகரில் திட்டமிடப்பட்டது. இது மட்டுமல்லாது, இந்த உலகளாவிய கண்காட்சி அப்போது பொருளாதார மந்த நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுசெல்லும் ஒரு வழியாகவும் கருதப்பட்டது.
இந்த கண்காட்சி குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக் கும் பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஏதேனும் ஒன்று தேவை என்று அனைவருக்கும் தோன்றியது. அப்போது கஸ்டவ் ஈபில், 1853 -ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் இதே போல ஒரு கண்காட்சிக்கு லாட்டிங் அப்சர்வேட்டரி என்ற மரத்தாலான ஒரு கோபுரத்தை கட்டி இருந்ததை நினைவு கூர்ந்து நாம் ஏன் ஒரு கோபுரத்தை கட்ட கூடாது என்ற எண்ணத்தை தெரிவித்தார்.
இந்த யோசனையின் விளைவாக 1884 ஆம் ஆண்டு திட்டமிடப் பட்டு பின்னர் 8 ஜனவரி 1887 அடிக்கல் நாட்டப்பட்டு 15 மார்ச் 1889 ஈபிள் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 31 மார்ச் 1889 அன்று திறந்து வைக்கப்பட்டது.
1889 -ஆம் ஆண்டு நடந்த உலகளாவிய பொருட்காட்சிக்கு ஈபிள் கோபுரம் நுழைவு வாயிலாக அமைந்தது. இந்த கோபுரம் முழுவதுமாக இரும்பால் ஆனது. வெயில் காலத்தில் வெப்ப விரிவாகத்தால் 15 முதல் 30செ.மீ வரை உயரம் கூடுகிறது. பின்னர் பனிக்காலத்தில் இந்த கூடிய உயரம் குறைகிறது. பாலங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இது பொருந்தும்.
1944 ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரது நாஜிப்படையினரால் , பிரான்சின் தலைநகர் பாரிஸ் கைப்பற்றப்பட்டது. உள்ளே நுழைந்த ஹிட்லர், பிரான்சின் கவர்னரிடம் , ஈஃபிள் டவரை இடித்து விடக் கட்டளையிட்டார்.. ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் இதைத் தெரிந்து கொண்டு, மேலே செல்ல உதவும், மின்தூக்கியின் கம்பி வடத்தை அறுத்து விட்டிருந்தனர்..
கிட்டத்தட்ட 1665 படிகள் மேலே ஏறி, ஜெர்மனியின் ஸ்வஸ்திக் கொடியை பறக்க விட கட்டளையிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ஏறி.., கொடியைப் பறக்க விட, அவ்வளவு உயரத்தில் அசுரத்தனமான காற்று, கொடியை அடித்து கொண்டு போய் விட்டது. மறுபடியும் ஒரு சிறிய கொடி பறக்க விடப்பட்டது. ஆனால் அதை கீழே இருந்து பார்க்க இயலாததாகிப் போனது.
என்ன தோன்றியதோ ஹிட்லருக்கு!!! சரி விடுவோம் என்று கோபுரத்தின் முன்பு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதோடு விட்டு விட்டார். அழித்தலுக்கும் அட்டூழியத்திற்கும் பேர் போன ஹிட்லரின் அந்த தருணத்து மனமாற்றத்தினால்இந்த கோபுரம் இன்றும் நிற்கிறது..,
–இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋