கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப் படுகிறது.
ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த ஏசுவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று முழங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப் படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை களை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங் களில் குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை நினைவுபடுத்தும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கு மக்கள் குருத்தோலையை கையில் பிடித்தவாறு பவனி சென்றனர்.
மேலும், தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை ராஜகுளத்தூர், புனித மைக்கேல் சம்மனசு ஆலயத்தில் மச்சுவாடி குழந்தை ஏசு ஆலய பங்குத்தந்தை வில்லியம்ஸ் தலைமையிலும், புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை சவரிநாயகம் தலைமையிலும் ஞாயிறு குருத்தோலை பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
.