Close
நவம்பர் 22, 2024 5:55 மணி

அடக்குமுறைக்கு எதிராக பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆவணம் தான் விடுதலை 1 திரைப்படம்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

விடுதலை 1 திரை விமர்சனம்

விடுதலை 1 – திரைப்படம் தொடங்கும் போதே இது கற்பனை யான கதை, இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோஎந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல என்று பொறுப்புடன் பொறுப்புத் துறப்பு அறிக்கை கொடுக்கப்படுகிறது.

1980 -களில் தமிழ்நாட்டில் தீவிரமாக இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படையை அடக்க, முடக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் 1992- இல் தர்மபுரியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமைகள், அதில் அதிகார மையம் எடுக்கிற முடிவுகள் ஆகியவையே படமாக விரிந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

அரியலூர் மருதையாற்று பாலத்தின் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட நிகழ்வை நினைவுறுத்தும் காட்சியுடன் படம் தொடங்குகிறது.  கிட்டத்தட்ட சுமார் எட்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக காண்பிக்கப்படுகிறது. தண்டவாளம், ரயில் பெட்டிகள், விபத்துக்கான களம் போன்ற காட்சி அமைப்புகள் செயற்கையாக செய்யப்பட்டது என்பதை நம்புவதற்கு தயங்கும் படி, கலை இயக்குனரின் கைவண்ணம் வியக்க வைக்கிறது.

இந்த விபத்து ஏற்படுவதற்கு, காரணமானவர்கள் முன்கூட்டி யே எச்சரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அசம்பாவிதத்தை தடுக்கவில்லை என்றும், ஓடும் ரயிலுக்கு குண்டு வைத்து, பல அப்பாவி தமிழர்கள் பலி என்று செய்தி வெளிவந்து, மக்களுக்காக போராடியவர்களை, மக்களைக் கொன்ற பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்கிற கருத்தும் நிலவுகிறது. இதுகுறித்த உரையாடலும், விவாதமும் தனியானது.

இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றிக்கு முக்கியமான காரணம், அவர் உருவாக்கும் திரைக்கதை மட்டுமல்ல. அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள், அதை படமாக்கும் விதம்.
சொல்லப்படுகிற கதையில் உருவாக்கும் யதார்த்தமான வடிவமைப்பும் தான். இவரது படங்களில் கதை தான் கதாநாயகன். அவர் தேர்வு செய்யும் களம் அனைத்தும் வித்தியாசமானவை.

மனிதாபிமான மிக்க காவலராக மனதை நெகிழ வைக்கும் சூரி.. மனிதாபிமானமற்ற உயர் அதிகாரியாக கௌதம் மேனன். சேத்தன் மற்றும் பிற நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களில் ஒன்றி தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பழங்குடியின பெண்ணாக அப்படியே வாழ்ந்து காட்டியுள்ள நடிகை பவானி சரியான தேர்வு. வெற்றிமாறனின் முந்தைய படங்களில் ஜி.வி. பிரகாஷ் தன் இசையின் மூலம், ஒரு ஆழ்ந்த தடத்தை பதித்திருப்பார். அவரது இருப்பு இல்லாத குறையை, அவரது தங்கை நிவர்த்தி செய்திருக்கிறார். மக்கள் போராளி யாக மக்கள் நாயகன் விஜய் சேதுபதி, மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தில் வரும் இரண்டு பாடல்களில், ”வழிநெடுக காட்டு மல்லி…” – வரும் இடம் ரசிக்கும்படியாக உள்ளது. ”ஒன்னோட நடந்தா…” – பாடல் இல்லாமல் கூட இருந்திருக்கலாம். பின்னணி இசையில் எப்போதும் ராஜாங்கம் நடத்தும் இசைஞானி இளையராஜா, தன் இசையை பரிபூரணமாக படம் நெடுக நிரப்பி இருக்கிறார்.

கிராமத்து மலையையும், கன்னித்தன்மை மாறாத வனத்தை யும் காட்சிப்படுத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நம்மை பரவசப்பட வைக்கிறார். வெற்றி மற்றும் வேல் கூட்டணி சேர்ந்து வெற்றிவேல் என்று கூக்குரல் போட வைக்கிறது.  நெறியாள்கைக்குள், ஒளி ஓவியம் பின்னி பிணைந்திருக்கிறது

வெற்றிமாறனின் வெற்றி ஒரு நாளில் நிகழ்ந்து விடவில்லை. அயராத முயற்சி, திறமையான இயக்குனர்களின் வழிகாட் டல், கதைக்கான தேடலில் காட்டுகிற மெனக்கெடல்.. என பல காரணிகள் தான் இவரை இந்த உச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

வலிமை உள்ளவனிடம் தங்களது நிலங்களை இழந்தவன், ஆதிக்க சாதிகளிடம் தங்களது குடும்ப பெண்களின் கற்பை பறிகொடுத்தவர்கள், அதிகார வர்க்கங்கள், வலிமையான வர்கள், நம்பிக்கை துரோகிகள்.இவர்களைப் போன்றவர்க ளிடம், தங்களது அடிப்படை உரிமையை இழந்தவர்களுக்காக, ஒவ்வொரு காலகட்டத்திலும், வெவ்வேறு போராட்ட அமைப்பு கள் போராடியிருக்கின்றன.

சமுதாய அமைப்பைப் மாற்ற முனைந்த போராளிகளை, பயங்கரவாதிகள் என்று நிகழ்கால அமைப்பு கூறினாலும், அவர்கள் ஒரு கோட்பாடுக்களுக்குட்பட்டு, மக்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறியும் வகையில், அடக்குமுறைக்கு எதிராக பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆவணம் தான் விடுதலை.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, கனிம வளங்களை கெடுத்து, வன வளங்களை சுரண்டி, வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர எத்தனிக்கும் அரசுக்கு இடையூ றாக எழும் போராட்டங்களை, அதிகார பலம் கொண்டு, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் எவ்வாறு கையாளும் என்பதையும், மக்கள் படையை ஒடுக்கி, தனியார் நிறுவனத் திற்கு ஆதரவாக அரசு செய்யும் முயற்சிகளும் பட்டவர்த்த னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை 2 -ஆவது பாகம் இன்னும் விறுவிறுப்புடன் இருக்கும் என்பதை, விடுதலை முதல் பாகம் முன்னுரை எழுதி விட்டு சென்று விட்டது. காத்திருப்போம் இன்னும் ஒரு விடுதலைக்காக..

–இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top