Close
மே 23, 2025 8:24 மணி

காலமானார்… புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தான ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி தொண்டைமான் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (12.4.2023)  காலமானார்.

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், நாடுகள் என மன்னர்கள் அவற்றை அரசாண்டு வந்தார்கள். நாடு முழுவதும் இது போன்ற சமஸ்தானங்கள் அதிகமாக இருந்தன.

தமிழகத்தை பொருத்தவரை அப்படி ஒரு பிரபலமான சமஸ்தானமாக இருந்தது புதுக்கோட்டை சமஸ்தானமாகும். தொண்டைமான் மன்னர்கள் பரம்பரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டார். அப்படி சமஸ்தானங் கள் இணைக்கப்பட்ட போது அவற்றில் ஆட்சி செலுத்தி வந்த ராஜாக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் எந்த சலுகையையும் பெறாமல் கருவூலத்தில் உள்ள பொன்னும் பொருளையும் அப்படியே ஒப்படைத்து,  இணைக்கப்பட்ட சமஸ்தானம் என்கிற சிறப்புடன் திகழ்வது புதுக்கோட்டை சமஸ்தானம்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதாவும் தற்போதைய மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாரு மாகிய ராணி ரமாதேவி(85) இன்று  காலமானார்.  உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக மன்னர் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ மாதா ராணி ரமாதேவியின் மகன் ராஜா  ராஜகோபால தொண்டைமான் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அகில இந்திய அளவிலர் இவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இவரது மனைவி ராணி சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சியின்  மேயராக பதவி வகித்தவர். இரண்டு முறை தொடர்ந்து அவர் சுமார் 10 ஆண்டுகள் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றி மாநகர மக்களின் பாராட்டை பெற்றவர். இவர்கள்  திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனையில் வசித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராஜா ராஜ கோபால தொண்டைமானின் அரண்மனை என்பது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மக்கள் இன்னமும் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

காலமான ராணிரமாதேவி தொண்டைமானின் இறுதிச் சடங்குகள் புதுக்கோட்டை அருகே  இச்சடியில் உள்ள தெட்சிணாமூர்த்தி பண்ணையில் நாளை(13.4.2023) வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top