Close
நவம்பர் 22, 2024 1:52 காலை

திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்து பெண் தற்கொலை.

மதுரை

திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த 5 குழந்தைகளின் தாய் நாகலெட்சுமி்

திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து  குதித்து ஐந்து குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி, சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசன் கோவையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அதன்பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார். அப்போது மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன்,  ஊராட்சி உதவியாளர்  முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த நாக லட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.  இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகப்பிரியா, பாண்டி, சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு  நகர் பேருந்தில்  சென்றார்.

அந்த பேருந்து சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தார். கண்ணை மூடி திறப்பத்திற்குள் நடந்த இந்த சம்பத்தை பார்தது பேருந்தில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர்.

இதையடுத்து பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் சக பயணிகள் பேருந்தில்  இருந்து இறங்கி சென்றனர். பேருந்தில் இருந்து குதித்த நாகலட்சுமி படுகாயமடைந்து துடித்து கொண்டிருந்தார்.  தங்களுடன் பயணித்து வந்த பெண் பேருந்தில் இருந்து குதித்து படுகாயமடைந்து கிடப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

படுகாய மடைந்து சாலையில் கிடந்த நாகலட்சுமியை பார்த்து அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதன. இதனைத் தொடர்ந்து நாகலட்சுமி அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி  உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது  ஆட்சியரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும்  உதவியாளர் ஆகியேர்  தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார்.

இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், உதவியாளர் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top