புதுக்கோட்டை லேணா திருமண மஹாலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (16.04.2023) கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் வள்ளலார் 200 முப்பெரும் விழா கடந்த அக்டோபர் 5 -ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங் களிலும், பல்வேறு நகரங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெறுகிறது.எல்லாம் உடைய அற்புத ஜோதி என்கின்ற ஜோதியினை கடவுளாக கொண்டுள்ளார். வள்ளலார் அவர்களின் கொள்கையினை பின்பற்றியும் மற்றும் அவர்களின் கருத்துகளின்படி வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார் அவர்கள், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்பதையும், சுத்த சன்மார்க்கத்தினை முக்கிய இலச்சிய மாக்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் உள்ளிட்டவை களை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அவரைப்பின்பற்றி பயிர் வாடியதால் வேதனைப்பட்ட தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையிஸ் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுத்தார்.
எனவே நாம் அனைவரும் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்துகொண்டு அதன்வழி பின்பற்றி நல்வாழ்வினை வாழ வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி .
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) எம்.சூரியநாராயணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) தி.அனிதா.
வள்ளலார் மாணவர் இல்லத்தலைவர் மருத்துவர் எஸ். ராமதாஸ், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மெய். அருள் நந்தி சிவம், த.மணி, கிருஷ்ணமூர்த்தி, அருள் (எ) இளங்கோ, இலாபராசு, திருப்பதி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.