குழந்தைகளின் நலன்கருதி பள்ளி, கல்லூரி போல அங்கன்வாடி மையத்திற்கும் மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிமாறுதல் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசு வழங்கிய கைபேசி காலாவதியான நிலையில் புதிய கைபேசியை வழங்க வேண்டும். குழந்தைகளின் நலன்கருதி பள்ளி, கல்லூரி போல அங்கன்வாடி மையத்திற்கும் மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கும் ஒருவருட மகப்பேறு விடுப்பை அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மையத்திற்கு செலவாகும் மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்;. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ரூ. 9 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் முன்வைக்கப்பட்டன. மாவட்டப் பொருளாளர் ஏ.சவுரியம்மாள் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.