Close
நவம்பர் 22, 2024 8:06 மணி

கந்த வேல் கோயிலைப் பற்றி… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

இங்கிலாந்திலுள்ள கந்த வேல் கோயில்

நாத்திக நண்பர்கள் இந்தப் பதிவை கடந்து சென்று விடலாம்..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் வேல்ஸ் தேசத்தில் அமைந்துள்ள கந்த வேல் கோயில்  பற்றி சிறு குறிப்புகள்..

நாங்கள் வேல்ஸில் பார்க்க வேண்டிய இடங்களைத் தேடிக் கொண்டிருந்தோம், கந்த வேல் என்பது முதன்மையான தீர்வாகவும், சுவாரஸ்யமான விருப்பமாகவும் இருந்தது.
வேல்ஸின் கார்மர்தன்ஷைர் கவுண்டியில் உள்ள லான்பம் செயிண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோயில், நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 5 மணி நேரப் பயண தொலைவில் உள்ளது.

1973 ஆம் ஆண்டு வேல்ஸில் மலைப்பாங்கான 115 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட கோயிலில், தோட்டம், மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் மற்றும் ஒரு சிறிய வனப்பகுதியும் உள்ளது.

கோயிலுக்குச் செல்லும் பாதை குறுகியது, ஒரு வாகனம் மட்டுமே செல்ல போதுமான பாதையில் எதிரே வாகனம் வந்தால் திரும்ப வாகனத்தை நகர்த்தி, சூழ்நிலையின் தேவைக்கேற்ப நாம் அல்லது எதிரே வருபவர்கள் தயாராக இருக்க வேண்டும். வளைவாக சற்று அகலப்படுத்தப்பட்ட பகுதியில் நிறுத்தி வழி விட வேண்டும். சற்று ஏற்றத்துடன், ஒத்தையடி குறுகலான பாதை என்பதால் சூதானமாக தான் பயணிக்க வேண்டும்.

கந்த வேல் கோயில் “பல கடவுளின் நாமங்களை உச்சரிக்கும் ஒருங்கிணைந்த சமூக ஆன்மீக கூடமாக இயங்குகிறது. நுழைவாயிலில் விநாயகர் சிலை உள்ளது. முருகன், மகாசக்தி மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய மூன்று கோயில்களும் இங்கு பிரதானம்.

ஆறு தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று, விசேஷமான நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயில்களில் வழிபாடு, ஆசிரமத்தில் வசிக்கும் அங்கத்தினர்களாக இருப்பவர்களால் குறிப்பாக வெள்ளைக் காரர்கள் மூலமாக மட்டும் வழி நடத்தப்படுகிறது, ஆனால் அனைவரும் பங்கேற்கலாம்.

ரங்கநாதர் கோயிலில் காலை 9:30 மணிக்கு பூஜை நடக்கும் நேரத்தில் நாங்கள் அங்கு இருந்தோம். செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி குளத்தில் ரங்கநாதர் சாய்ந்திருக்கும் பெரிய சிலைக்குஅனைத்து பாரம்பரிய சடங்குகளும் மந்திரங்களும் உச்சரித்த படி பூஜை நடந்தது. பூஜை நடத்திய பூசாரிகள் அனைவரும் வெள்ளையர்கள். ரங்கநாதர் கோயில், நாள் முழுவதும் திறந்திருந்தாலும் முருகன் மற்றும் சக்தி கோயில் பூஜை நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும்.

ஸ்ரீ ரங்கநாதரருக்கான பூஜை முடிந்து, மலை மீது உள்ள மகா சக்தி கோயிலை நோக்கி நடந்தோம். இதற்கு முன் பல முறை இங்கு வந்த போது சற்று கரடு முரடாக இருந்த செங்குத்தான நடைபாதை, தற்போது நன்றாக பராமரிக்கப்பட்டு, முன்பை விட தரமாக அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் செங்குத்தான பாதையில் கைப்பிடி மரக்கட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிடித்து ஏறுவதற்கு வசதியாக உள்ளது. மகா சக்தி கோயிலை அடைய சுமார் 25 நிமிடங்கள் எடுத்தது. சமதள மைதானத்தை அடைந்ததும் அங்கே ஒரு பூங்கா இருக்கிறது. மான், கோழி, சேவல் என இன்னும் பிற விலங்குகள், பறவைகள் நிரம்பிய இயற்கை சூழலுடன் மண் மாசுபடாத காட்சி கண்களுக்கு ரம்மியமாக காட்சியளித்தன.

மகாசக்தி கோயிலுக்கு செல்லும் பாதையில் இந்த கோயிலை நிறுவிய குரு சுப்பிரமணியம் அவர்களின் சமாதி மற்றும் சிலை வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் பார்வையிட்டு மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தோம். கீழ்நோக்கி வருவதற்கு சுமார் 12 நிமிடங்கள் மட்டுமே ஆனது.

நேராக முருகன் கோயிலில் மதியம் 1.30 -க்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டோம். அதன் பிறகு உணவு பரிமாறுவதற்கு இருக்கைகளுடன் அமைக்கப்பட்ட கூடாரத்திற்கு சென்று, வரிசையில் காத்திருந்து, அங்கு வழங்கப்படுகிற சூடான மதிய உணவை சாப்பிட்டோம். சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மலையிலிருந்து இறங்கினோம். இப்படியாக எங்களது வேல்ஸ் முருகன் கோயில் பயணம் இனிமையாக  முடிந்தது.

கந்த வேல் கோயில் பற்றி சுருக்கமாக பார்ப்போம்..

இந்த கோயிலை நிறுவிய குரு ஸ்ரீ சுப்ரமணியம் 1929 -இல் இலங்கையில் பிறந்தவர். அவரது தந்தை இலங்கையின் மருத்துவ அதிகாரி, தாயார் அனைத்து மதங்களையும் தனது பக்தியில் தழுவிய ஒரு ஆன்மீகவாதி. ஏழு வயதாக இருந்த போது, குருஜி தனது ஆன்மீக ஞானத்தை ஆழமாக உணர்ந்த தாக சொல்கிறார்கள். முருக கடவுள் மீதான அதீத பக்தியால் தனது குடும்பப் பெயரை தவிர்த்து,  தன் பெயரை ‘சுப்பிரமணியம்’ என மாற்றிக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், குருஜி ஐரோப்பா விற்கு வந்து பிரிட்டனில் குடியேறினார், அங்கு அவர் தனது வீட்டு வாசலுக்கு வரும் அனைவருக்கும் தியானம், மந்திரம் மற்றும் யோகா போன்ற கலைகளை இலவசமாக கற்பித்தார்.

அவரது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் அனைவரு டைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, இல்லாதவர்களுக்கு உணவளிப்பது மற்றும் இயலாதவர்களை பராமரிப்பது போன்ற அறச்செயல்களை பல ஆண்டுகளாக புரிந்து, சமூகசேவையில் அக்கறை கொண்ட ஆளுமையாக வாழ்ந்திருக்கிறார்.

கந்த வேல் கோயிலுக்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை யாத்ரீகர்கள் வந்து போவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இங்கு செல்லும் பக்தர்களுக்கு உணர்ச்சி பொங்கும் ஆன்மீக தரிசனத்தை இந்த புண்ணியஸ்தலம்
வழங்குகிறது.  காலமற்ற கடவுள் உணர்வு, தன் உணர்வில் கலந்த குரு ஸ்ரீ சுப்ரமணியம் தனது சிறிய கோயிலை லண்டனில் இருந்து வேல்ஸுக்கு மாற்றிய பிறகு, கந்த வேல் ஆலயம் மெல்ல மெல்ல பிரபலம் அடைய ஆரம்பித்தது.

1973 ஆம் ஆண்டில் முதலில் நிறுவப்பட்ட கோயில், முருக கடவுளுக்கானது. மிகவும் சிறியதாக இருந்த இந்த கோயில், ஆறு பேருக்கு மட்டுமே போதுமான இடவசதியுடன் இருந்தது. காலப்போக்கில், பக்தியின் தீவிரத்தின் பிரதிபலிப்பாக, தெய்வீக சக்தியின் வெளிப்பாடு அதிகரித்தது.

கோயிலுக்குள் மூர்த்திகள், நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, வந்து போகும் மக்களின் எண்ணிக்கையும் கூடுதலானது. மெல்ல மெல்ல தேவைக் கேற்ப, மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இடமும், பூஜைக்கான நேரமும் விசாலமடைந்தது.

குருஜிக்கு கந்த வேல் நிறுவப்போகும் நிலத்தை இறைவன் ஒரு தரிசனத்தில் காட்டியதாக சொல்கிறார்கள், ஆனால் அந்த இடம் எங்குள்ளது என்பதற்கான எந்த துப்பும் கொடுக்கப்பட வில்லை.

ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிட்டனின் நீண்ட பயணத்திற்கு பின், வேல்ஸில் உள்ள கார்மர்தன்ஷையரில் ஒரு ஓடைக்கு அருகில் ஒதுக்குப்புறமாக அமைந்த பண்ணை, விற்பனைக்கு இருப்பதற்கான விளம்பரத்தைக் கண்டார். அந்த இடத்தை உடனடியாக பார்க்கச் சென்றார், அங்கு சென்றவுடன், அவரது தேடல் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தார். இந்த இடம் தான் இறைவனின் புதிய தலமாக இருக்க வேண்டும் என்பதில் குருவுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.

தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் அதை வாங்குவதற்கு தயங்கவில்லை!  சில வாரங்களில், குரு எந்த நன்கொடையும் கோராமல், தேவையான அனைத்து நிதிகளும் வந்து சேர்ந்தன.  குருவும், அவரது நண்பர்களும் தாங்கள்
இறைவனின் கையில் இருப்பதை உறுதியாக நம்பினர்.

இவை அனைத்தும் மிகக் குறைந்த நிதியில் சாதிக்கப்பட்டது; நன்கொடைகள் தன்னார்வ அடிப்படையில் வழங்கப்பட்டன.
யாரையும் பணத்திற்காக அணுகவில்லை. இன்று வரை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, யாத்ரீகர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கந்த வேல் ஆலயத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் முழுவ தும் அநாமதேய நன்கொடைகள் மூலமே நிறைவேற்றப் படுகின்றன. நிதிநிலை மற்றும் பணபரிவர்த் தனை, வணிகம் சாரா கொள்கைக்கு உட்பட்டு இயங்குகிறது.

சமீபமாக மின்னணு நன்கொடை பெட்டிகள் இரண்டு மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மனமுவந்து பக்தர்கள், முன்வந்து நன்கொடை அளிக்கிறார்கள்.

தன்னலம் கருதாமல் ஆன்மீக தேடலில் தன்னை கரைத்துக் கொண்ட குருவின் உடல்நிலை மோசமானது. காலம் அவரது வாழ்வில் கடுமையான துன்பம் நிறைந்த காலகட்டத்தைக் கொண்டு வந்தது, 2007 இல் அவரது உடல் மரணத்தில் உச்சகட்டத்தை அடைந்து, இறுதியாக ஜூலை 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அவரது இறை பணி முடிந்தது. பூத உடல் பூலோகத்தை விட்டுப் புறப்பட்டது.

உண்மையான குருக்கள் என்பவர்கள், ஒரு அரிய ஆத்மாக்கள். குரு ஸ்ரீ சுப்பிரமணியம் தன் வாழ் நாள் முழுவதும், தெய்வீகத் தின் உண்மையான கருவியாக இருந்தார். மக்களின் பரிணாம வளர்ச்சியை முடுக்கி விடுவதே அவருடைய வேலையாக இருந்தது; அவரது ஆசீர்வாதங்கள் மற்றும் போதனைகள் மூலம், மனித வாழ்க்கையின் நோக்கம் நமது கீழ் நிலையில் இருந்து மேலே உயர்ந்து, இருப்புக்கான மிக உயர்ந்த காரணத்தை உணர்ந்து கொள்வதாகும் என்பதை அவர் நமக்குக் காட்டினார்.

பல ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு ஆன்மீகவாதியின் அப்பட்டமான எளிமையைப் பற்றியும்,இந்த கோயிலை உருவாக்க அவர் அடைந்த கஷ்ட நஷ்டங்களையும் இன்றைய பார்வையாளர்கள் சிறிதும் அறிந்திருக்க முடியாது.

குரு ஸ்ரீ சுப்ரமணியம் என்கிற தனி மனிதனின் அயராத முயற்சியால், முன்னெடுப்பால் அயலகத்தில் தமிழ் கடவுள் முருகனின் மந்திரம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது.புதிது புதிதாக இன்னும் பிற கடவுள்களின் விக்கிரங்களும், ஆலயங்களும், தொடர்ந்து கந்த வேல் கோயில் வளாகத்தில் வந்த வண்ண மிருக்கின்றன. புதுப்புது ஆலய பிரவேசங்களால் , காலப்போக் கில் முருக கடவுளின் நாமம் மழுங்கடிக்கப்படாது என நம்புவோமாக..

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top