Close
நவம்பர் 22, 2024 6:05 மணி

புத்தகங்களுக்கு செலவிடுவது ஓர் முதலீடு ஆகும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டை

புதுகை வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட நூலகத்தில் நடைபெற்ற உலத புத்தக தின விழா

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் (23.4.2023) வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில்  மாவட்ட மைய நூலகத்தில்  நடைபெற்ற  உலக புத்தக தின விழாவில்  ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசியதாவது: உலகம் போற்றும்  37 நாடகங்களை அளித்த நாடக மேதை ஷேக்ஸ்பியர் மறைந்த நாள் 23.4.1616 அவரது நினைவு நாளையே உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம்.

ஒரு மனிதனுக்கு நாடும் மொழியும் இரண்டு கண்களைப் போன்றவை. மொழியைத்தூற்றி வாழ்ந்த நாடும் இல்லை. மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் நாடும் இல்லை,

ஒரு நாட்டிலுள்ள இனத்தை அழிக்கவேண்டுமென்றால் அந்த இனம் பேசும் மொழியை அழிக்க வேண்டும். மொழியை அழிக்க வேண்டும் என்றால் அம்மொழியிலுள்ள இலக்கியங்களை அழிக்க வேண்டும். இலக்கியங்களை அழிக்க வேண்டுமென்றால் அவ்விலக்கியங்களைத் தாங்கிய புத்தகங்களை அழிக்க வேண்டும். ஆகவேதான் சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணம் கலைமகள் நூலகத்தை அழித்தார்கள் இன வெறியர்கள்.

விஞ்ஞானத்துக்குப் பெருமை புதுமையில் இலக்கியத்துக்குப் பெருமை பழமையில். எந்த நாட்டின் இலக்கியம் மிகவும் பழமையானதாக இருக்கிறதோ அந்த நாடு நாகரிகத்திலும் கலாசாரத்திலும் சிறந்து விளங்கிய நாடாகும். புத்தகம் படிப்பது  மனிதனின் அறிவை மட்டும் வளர்க்கவில்லை. அவனது மனதையும் மென்மைப்படுத்தி பண்புள்ளவனாக மாற்றுகிறது.

வரலாற்றில்  உலகில் நடந்த மிகப்பெரும் புரட்சி 4.7.1776 -ல் நடந்த அமெரிக்க புரட்சியும் 1.8.1789 -ல் நடந்த பிரெஞ்சு புரட்சியும் ஆகும். இந்த இரண்டு புரட்சிக்கும் வித்திட்டது  ரூசோ எழுதிய சமுதாய ஒப்பந்தம் என்ற நூலும் ஒரு காரணம்.  அமெரிக்கா வெளியிட்ட சுதந்திர பிரகடனத்திலும், பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் வெளிவந்த மனித உரிமைகள் பற்றிய சாசனத்திலும் இடம் பெற்றுள்ள வாசகங்கள் ரூசோவின் சமுதாய ஒப்பந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவையே ஆகும்.

  Man is Born Free But Every where Be is in Chains  என்ற ரூசோவின்  வாசகம் வரலாற்றில் இன்று வரை எல்லோராலும்  மேற்கோளாகக் காட்டப்படுகிறது. உலகின் ஆதிகவி என போற்றப்பட்டவர் ஹோமர். அவர் எழுதிய இலியட், ஒடிசே என்ற இரண்டு காவியங்களும் இன்றுவரை எல்லோராலும் போற்றி படிக்கப்படுகிறது.அதனாலேயே ஆங்கிலத்தில் Read Homer Once You Can Read No More Homer Will be All the Books That You Need சொல்கிறார்கள்.

உலகை மாற்றிய புத்தக வரிசையில் ஹாரியர் பீச்செர்(Mrs. Harriet Beecher Stowe) என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் நாவல் (Uncle Tom’s Cabin)  டாம் மாமாவின் குடில் 1852 -ல் முதல் முதலில் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் வெளி வந்தது. இந்நாவல் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னாளில் அனைத்து மொழிகளிலும்  வெளி வந்திருக்கிறது.

ஒரு புத்தகம்  உலகத்தை ஆட்டி வைக்க முடியுமா என்றால்.?. ஆம் ! இந்த புத்தகம் உலக நிலையை மாற்றுவதற்கு மிகவும் வேலை செய்திருக்கிறது. இதனை தமிழில் ப. ராமஸ்வாமி என்பவர்  1. நீக்ரோ மாமா. 2. டாம் மாமாவின் குடிசை -என மொழி பெயர்த்து 1966 -ல் வெளிவந்திருக்கிறது.

பேரறிஞர் அண்ணாவை புற்றுநோய் அறுவைக்காக அழைத்த பொழுது மருத்துவர்களிடம் அரை மணி நேரம்  கொடுங்கள், ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன், அதை படித்து முடித்து விடுகிறேன் என்று சொன்ன செய்தியை நாம் அறிவோம். அப்பொழுது அவர் படித்துக்கொண்டிருந்தது   தி மாஸ்டர் ஆப் கிறிஸ்டியன்  -என்ற புத்தகம்தான்.

அண்ணல் அம்பேத்கரும் ஓர் புத்தகப்பிரியர்தான். எங்கு சென்றாலும் புத்தகங்களை வாங்கும் பழக்கமுடையவர். ஒரு முறை இங்கிலாந்திலிருந்து, தான் அமெரிக்கா செல்வதால், இரட்டைமலை சீனிவாசனிடம் புத்தகங்கள் அடங்கிய 32 பெட்டிகளை கொடுத்து அனுப்பினார்.

பின்னர் 1932 -ல் இலண்டனிலிருந்து  பம்பாய் வந்த அம்பேத்கர்  தன்னுடன் 24 பெட்டிகளில் புத்தகங்களைத்தான் எடுத்து வந்தார். அவரது கண் அறுவைச் சிகிச்சையின் போது பார்வை பறிபோக வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் கூறியபோது, அம்பேத்கர் சொன்னார், I would Kill Myself rather than live without reading -படிக்க இயலாத நிலை உருவானால்  தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினாரென்றால் அவருக்கு படிப்பதில் உள்ள ஆர்வம் எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டுமென்று எண்ணிப்பாருங்கள்.

பலருக்கு  Time is Money   என்றால் அம்பேத்கருக்கு  Time is Knowledge.  இளைஞர்கள் அம்பேத்கரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கம் புத்தகங்கள் வாங்குவதும், அதைப்படிப்பதும்தான்.

கல்விக் கரையில  கற்பவர் நாள் சில,  மெல்ல நினைக்கிர் பிணி பல  – என்ற  நாலடியை இளைஞர்கள் மறக்க வேண்டாம்.

புத்தகங்களுக்கான செலவிடுவது ஓர் முதலீடு ஆகும். ஆகவே நல்ல  நாளும் நூல்களை வாசிப்போம்ய நம்மையும் நாட்டையும் உயர்த்துவோம் என்றார் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.

நிகழ்சிக்கு  முதுநிலை நூலகம் கி. சசிகலா முன்னிலை வகித்தார்.  கவிஞர் புதுகை புதல்வன் வரவேற்றார்.  வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன்  பாராட்டுப் பெறும் ஆளுமைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மறைந்த கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், சிறந்த நூலுக்கான அரசிண் விருது பெற்ற ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி  தமிழ்த்துறைத்தலைவர் சி. சேதுராமன், பொன்னியில் செல்வன் நாவலின் 5 தொகுதிகளையும் வாசித்து முடித்த 12 வயது வாசகி எம். லாராபிரபஞ்சனி, மாவட்ட மைய நூலகத்தில்  அதிக நூல்களை பயன்படுத்தி  வாசித்த வாசகர்கள் ச. விஜயலெட்சுமி, வை. சம்பத்குமார், சே.மோகன் ஆகியோர்   பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதில், புத்தக ஆர்வலர்கள் டாக்டர் எஸ். ராமதாஸ், டாக்டர் ஜி. எட்வின்,  எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், அ.லெ. சொக்கலிங்கம், பேராசிரியர் பொ. அண்ணாமலை, கவிஞர் நிலவை பழனியப்பன், ஆசிரியர் கஸ்தூரிரெங்கன், கராத்தே ஆசிரியர் மனோகரன் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கவிஞர் பீர் முகமது நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top