Close
நவம்பர் 22, 2024 12:32 மணி

காலத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும்

விருதுநகர்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் எண்ணும் எழுத்தும் ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சியின் தொடக்க விழா

ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் எண்ணும் எழுத்தும் ஒன்றிய அளவிலான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சியின் தொடக்க விழா கிருஷ்ணன்கோவிலில் உள்ள அருள்மிகு கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை பேசியதாவது: பொதுமக்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்களால் கொண்டாடப்படும் திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டம் ஆகும்.எனவே எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும்.

எந்த ஒரு ஆசிரியர் தன்னுடைய பணியை யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் சிறப்பாக செய்கிறாரோ அவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.அதே போல் ஆசிரியர்கள் பயிற்சிக்கு வரும் போது குறித்த நேரத்திலும் மனமுவந்தும் வர வேண்டும்.ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும்.

எந்த வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்துவதை மாணவர்கள் சிறப்பாக உற்று நோக்குகிறார்களோ அவரே சிறந்த ஆசிரியர்.ஆசிரியர்கள் பொதுமக்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோழமையோடு பழக வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் இன்று தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசுப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பயிற்சி கொடுப்பது ஆசிரியர்களின் திறமையை வளர்க்கவே.பயிற்சியை தொடர்ச்சியாக எடுக்கும் ஆசிரியர் தனது வகுப்பறையில் சிறந்த ஆளுமைத் திறன் மிக்கவராக திகழ்கிறார் என்றார்.

பயிற்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார்.

பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நா.ரெ. மகாலிங்கம் வரவேற்றுப் பேசினார்.

வத்திராயிருப்பு ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கணேஷ்வரி நன்றி கூறினார்.பயிற்சியின் பார்வையாளர்களாக வத்ராப் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top