புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புறநோயாளி கள் பிரிவு கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வல்லத்திராகோட்டை அரசு துணை சுகாதார நிலைத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள் (24.04.2023) திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் பெருங்க;ர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் செலவில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம், சத்தியமங்கலத்தில் ரூ.20 இலட்சம் செலவில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம், கல்குடியில் ரூ.20 இலட்சம் செலவில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், தேசிய சுகாதார திட்டம் அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டத்தின்கீழ் தலா ரூ.20 இலட்சம் வீதம்; ரூ.80 இலட்சம் செலவில் குலமங்கலம் வடக்கு, நெடுவாசல், பனங்குளம், வல்லத்திராகோட்டை ஆகிய பகுதிகளில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.1.80 கோடி செலவிலான மருத்துவத்துறை கட்டடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது: மருத்துவத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கும் வகையில் மருத்துவத் துறையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் பொதுமக்களின் நலனுக்காக மருத்துவத்துறை சார்பில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட உள்ளன.
அதன்படி மருத்துவத்துறையின் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கான கட்டடப் பணிகளும், ரூ.21.67 கோடி மதிப்பீட்டில் 73 அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பொதுமக்களின் நல்வாழ்வு மீது மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 38 மாவட்ட ங்களிலும் வாரந்தோறும் சாலைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மேலும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடப் பணிகளும், திருமயம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நலவாழ்வு வாழ வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது;
பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப் படையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் உயர்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவத்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1.50 கோடி மக்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகள் வழங்கும் திட்டமும், நோய்கள் வருவதற்கு முன்பாகவே அவற்றை கண்டறிந்து குணப்படுத் தும் வகையில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” முகாம் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் அவசர சிகிச்சைப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும், முதலமைச்சர் பின் தங்கிய பகுதியான ஆலங்குடியில் சுமார் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் 50 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டையும் அமையப்பெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவின் செயல் பாடுகள் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), பி.சின்னையா (புதுக்கோட்டை), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பார்த்தசாரதி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, துணை இயக்குநர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;