Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோத்து நாட்டை ஆட்சி  செய்து கொண்டிருக்கிறார்கள்: கே. பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் மூத்த  தலைவர் ஆர். உமாநாத் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பேசுகிறார்  மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

இந்திய விடுதலைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கயவாளிகள் கையில் இன்றைய மத்திய ஆட்சி வந்துவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், இரு முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர், இரு முறை நாகை சட்டபேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த ஆர். உமாநாத் நூற்றாண்டு விழா கருத்தரங்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நூற்றாண்டு மலரை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் பேசியது: தமிழகத்திலே  இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுங்கள் என்று சொல்லுகிற ஆர் எஸ் எஸ்  இந்த நாட்டில் இருக்கலாம்.  எம்மதமும் சம்மதம் சொல்லுகிற இஸ்லாமியர்கள்  இருக்கக்கூடாது என்கிற கோட்பாட்டை தக்க  வைக்க பார்க்கிறார்கள்.
பாராளுமன்ற கூட்டத்தையே ஒன்றும் இல்லாமல் ஆக்கி முடித்து விட்டார்கள். இந்த நாட்டில் இருக்கிற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கக் கூடிய ஒரு அரசாக மத்திய அரசு இருக்கிறது.
ஏகாதிபத்தியம் இந்த நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்று விடுதலைக்காக உமாநாத் போன்ற போராடினார்களோ அப்படிப்பட்ட ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோத்து நாட்டை ஆட்சி  செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டை சுரண்டுவதற்கு அனுமதிக்க கூடாது  என்கின்ற
மகத்தான காரியத்தை நிறைவேற்றுவது என்று நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம்  நிச்சயமாக இந்தியாவில் 2024 -ல்  நடைபெறுகிற தேர்தலிலே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்திருக்கிற ஆட்சி  மத சார்பற்ற கூட்டணி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி இருக்கும் வரை தாமரைக்கு தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதை இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிரூபிக்கும்.
தமிழகத்தில்  யாருடன் பிஜேபி உறவு வைக்கும்  என்பதும், ஒருவேளை அந்த கூட்டணி எப்படிப்பட்ட கூட்டணியாக இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது .வரும் 2024 தேர்தலிலே இந்திய அளவில் ஒரு அணி உருவாக்கப்படும். அந்த பின்புலத்தில் தமிழ்நாட்டின்  திராவிட முன்னேற்றக் கழகம்  செயல்படும்.
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், விரோதமான நடவடிக்கைகளை எங்கள் கொள்கை நிலையிலே உறுதியாக  நின்று  அதை எதிர்த்து வாதிட்டு இருக்கிறோம். நாங்கள் சொல்வதெல்லாம்  திராவிட முன்னேற்றக் கழக அரசு  இது போன்ற முரண்பாடான  நடவடிக்கைகளைத் தவிர்க்க  வேண்டும்.
மக்கள் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய காரியங்களை நீங்கள் செய்யக்கூடாது என்பதை  திரும்பத் திரும்ப நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 12 மணி நேர வேலைச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற  கட்டாயம்  என்ன இருக்கிறது.  150 ஆண்டுகளாக  தொழிலாளிகள் போராடிப் பெற்ற  8  மணி நேர வேலை உரிமையை பறிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது போன்ற முரண்பட்ட கரும்புள்ளி நடவடிக்கைகளை  திமுக அரசு தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சங்கரய்யா, நல்லசிவன், உமாநாத் போன்றோரின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டுகள் வெறுமனே தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது மட்டும் நோக்கமல்ல. தலைவர்களின் வாழ்க்கை முறையை மறுவாசிப்பு செய்யும் முறைதான் இந்த விழாக்கள்.
எதிர்காலத்தில் இடர்பாடுகளை சந்திக்கும்போது, உமாநாத் போன்றோரின் போராட்ட வாழ்க்கை அவற்றை சந்திக்க உதவிசெய்யும். கேரள மாநிலம் காசர்கோடு என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர் உமாநாத். தமிழ்நாட்டின் மாபெரும் தலைவராக உருவானார். புதுக்கோட்டையில் இரு முறை மக்களவை உறுப்பினராக, நாகையில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.
இந்தப் பதவிகளைக் காட்டிலும், இந்த நாட்டில் ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், ஏழரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் உமாநாத். சிறையில் இருந்து உயிரைப் பணயம் வைத்து தப்பி வந்து மக்களுக்காக பணியாற்றியவர் உமாநாத். கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக தியாகங்களைச் செய்பவர்கள்.
உமாநாத்தும், பாப்பாவும் என்ன சாதி என்று இப்போது வரை எங்களுக்குத் தெரியாது. அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு கட்சிப்பணியாற்றியவர்கள். மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்று பெண்களும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், காதல் திருமணங்களை ஆணித்தரமாக ஆதரித்து  வீரச்சமர் புரிகின்றவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றார் கே,பாலகிருஷ்ணன்.
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி பேசியதாவது:
பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியலை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் வல்லமை பெற்றது கம்யூனிஸ்ட் இயக்கம் தான். போராளிக்கு ஓய்வு என்பதே இல்லை.  உமாநாத் வாழ்க்கையின் போராளி வாழ்க்கையை முன்வைத்து இன்னும் நிறைய களப்பணியாற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசியல் சவால்களை சந்திக்க உமாநாத் வாழ்க்கை உதவும் என்றார் உ.வாசுகி.
கருத்தரங்குக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் திருச்சி எஸ். ஸ்ரீதர், ஐ.வி. நாகராஜன், மா. சின்னதுரை எம்எல்ஏ, திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் ஆர். ராஜா  உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகரச் செயலர் ஆர். சோலையப்பன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் மூத்த  தலைவர் ஆர். உமாநாத் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பேசுகிறார்  மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன். உடன் , கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மத்தியக்கு ழு உறுப்பினர் உ. வாசுகி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top