Close
செப்டம்பர் 20, 2024 5:47 காலை

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் ஏஐடியுசி தொழில் சங்க நிர்வாகிகள் தலைமையில் மனு அளிக்க வந்த பூ வியாபாரிகள்

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சுமார் 30 வருடங்களாக தட்டு வண்டியில் பூ வியாபாரம் செய்பவர்கள், தள்ளு வண்டியில் பழம், பல்பொருள் விற்பவர்கள்,தரையில் அமர்ந்து செருப்பு தைப்பவர்கள் என பல்வேறு தொழில்களை செய்து வருகின்ற உடல் உழைப்பு தொழிலாளர்களை அங்கு வியாபாரம் செய்யக்கூடாது என  தஞ்சை மாநகராட்சி நிர்வாக ஊழியர்களால் விரட்டப்படுவதுடன், அவர்கள் வைத்திருக்கும் பூக்கள், பழங்கள் மற்றும் பொருட்களை தரையில் வீசி எறிந்து  அத்து மீறி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக மாற்றப்பட்ட பிறகு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் பேருந்து நிலையத்தில் உள்ளே கடைகளை ஏலத்தில் வாடகைக்கு எடுத்து ஏதோ ஒரு வகையில் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் 30 வருடங்களாக தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, தங்கள் உடல் உழைப்பு செலுத்தி சுயமரியாதைடன் பிழைப்பு நடத்துகின்றவர்களை, அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக் காமல் அவமதிக்கும் போக்கை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

அதேபோல அவர்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கி மேற்கூரை உள்ளிட்ட எந்த வித வசதிகளும் செய்து தராமல்  விரட்டியடிப்பது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.  அவர்களை அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்களால் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாது என்று ஏஐடியூசி மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுந்தரபாண்டியன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் மற்றும் பூ வியாபாரம் செய்பவர்கள் சுதாகர், பாபு ,சுகந்தி ,செல்வி, மலர்க்கொடி உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top