Close
நவம்பர் 25, 2024 2:15 மணி

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்பு… காத்திருக்கும் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார், சின்னத்துரை எம்எல்ஏ

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை யடுத்து காத்திருக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிகழ்வில்  எம்.சின்னதுரை எம்எல்ஏ  பங்கேற்றுல வாழ்த்தி பேசினார்.

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்படுவதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு தலைமையிலான தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில் இரவு முழுவதும் பங்கேற்று, புதன்கிழமை காலையிலிருந்தும் போராட்டம் தொடர்ந்தது.

போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கவும், காலிப்பணியி டங்களை நிரப்பவும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பிற்பகலில்  போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

எம்.சின்னதுரை எம்எல்ஏ வாழ்த்து..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது  அவர் பேசியதாவது: உங்களின் ஒன்றுபட்ட போராட்டத் தின் காரணமாக உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை ஆணையாக அரசு விரைவில் வெளியிட வேண்டும்.

திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாக அறிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் உங்களின் ஒன்றுபட்ட போராட்டமே தீர்வாக இருக்கும். சட்டமன்றத்தில் எனது கன்னிப் பேச்சிலேயே உங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன்.

இதுவரை 5 முறை உங்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்து உள்ளேன். அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளேன். ஆனாலும் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. ஆனால், உங்களின் ஒன்றுபட்ட போராட்டமே வென்றுள்ளது. சிஐடியு தலைமையிலான உங்களின் போராட்டம் முழு அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் கிடைக்கும் வரை தொடர வேண்டும் என்றார்.

போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி, செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top