Close
நவம்பர் 24, 2024 10:22 மணி

செல்லுலாயிட் இலக்கியமாக மணிரத்னம் படைத்த பொன்னியின் செல்வன் 2

அயலகத்தமிழர்கள்

பொன்னியின் செல்வம் 2 விமர்சனம்

கல்கியின் தலைசிறந்த படைப்பான பொன்னியின் செல்வனை, திரைப்படமாக்க பல தசாப்தங்கள் ஆனதற்கு பட்ஜெட் தான் காரணம் என்று அடிக்கடி கூறப்படுகிறது.

இது ஓரளவு உண்மையாக இருந்தாலும், அதிகமான பாத்திரங்களும், ஆழமான உரையாடல்களும் உடைய ஒரு புதினத்தை, திரை வடிவம் என்கிற காட்சி ஊடகத்துடன் சரியாக எப்படி பொருத்த முடியும் என்கிற ஐயம் இருந்தது.

அந்த இரண்டு ஊடகங்களுக்கு இடையேயான இடைவெளியை நீக்கி, இந்த படைப்பை உணர்வு பூர்வமாக திரைப்படமாக்க, காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு, மணிரத்னம் என்கிற மகா கலைஞனின் கைகளில் கொடுத்திருக்கிறது.

முதல் பாகத்தில், எழுத்தாளர் கல்கிக்கு இயக்குனர் மணிரத்னம் விசுவாசமாக இருந்தார், புத்தக வாசிப்பாளர்களை திருப்திப்படுத்திய அதே வேளையில், சில ஆதார அடிப்படையில் உண்மைகளைக் கொண்ட ஒரு வரலாற்று புனைவு கதையை கையாளும் போது ஏன் கொஞ்சம் சுதந்திரம் எடுக்கவில்லை என்ற கேள்வியும் நீடித்தது.

பொன்னியின் செல்வன்- 2 படத்தைப் பார்த்த பிறகு, முதல் பாகத்தில் புதினத்தின் கட்டுக்கோப்பு கலையாமல், அவருக்கே உரிய பாணியில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தி, ஆடம்பரமான பாடல் காட்சிகளை கொண்டு, புதினத்தின் பாத்திரங்களை நமக்குள் பதியும் படி நிறுவினார் என சொல்லலாம்.

ஆனால் இரண்டாம் பாகத்தில், புத்தகங்களிலிருந்து துணிச்சலாக விலகி, எழுதப்பட்ட விஷயத்தை விட, தனது கலை ஞானத்திற்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார். இது பொன்னியின் செல்வன் 2 -ஐ, சிறந்த சினிமாவாகவும், அதன் முதல் பாகத்தை விட சிறந்ததாகவும் உயர்வு படுத்தி காட்டுவதற்கு உதவி இருக்கிறது எனலாம்.

ஆதித்த கரிகாலன் (விக்ரம்) மற்றும் நந்தினியின் (ஐஸ்வர்யா ராய்) இளமைப் பருவத்தின் பின்னோக்கிய காட்சிகள், மயக்கும் முன்னுரையுடன் துவங்குகிறது. இந்தக் காட்சிக்கு கற்பனை தேவை. மணிரத்னத்துக்கு அது கைவந்த கலை.

நந்தினியும் கரிகாலனும் இப்படித்தான் சந்தித்திருக்க வேண்டும் என்று நம்ப வைக்கிறார் இயக்குனர். குதிரையின் மீது அமர்ந்து சிரித்துக் கொண்டே ஆற்றங்கரையில் அந்த கடினமான புன்னகையுடன் அவள் நிச்சயமாக அவனைக் கடந்து சென்றிருப்பாள். அப்படியான கற்பனையை நிஜமாக நல்ல சினிமா, எளிதாக நம்ப வைத்து விடும். பிரமாண்ட செட் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே நாம் அங்கு செல்ல முடியாது, அது மணிரத்னத்துக்கு தெரியும்.

இது நிஜ நிகழ்வாக இல்லாமல் இருக்கலாம். நம்பும்படியாக செய்வது தான் கலை.. கலையின் ஒரே புள்ளி கற்பனை. அப்படிப்பட்ட கவர்ச்சியான இடங்களில், கற்பனையை சோழ தேசத்தின் முழுவதுக்குமாக காட்டி நம்மை சொக்கிப் போக வைக்கிறார்.

நந்தினிக்கு என்ன நடந்தது என்பதை காட்டிய பிறகு, படம் மீண்டும் அருள்மொழி வர்மனின் கதையைத் தொடங்குகிறது.
கடலில் இருந்து ஊமை ராணியால் மீட்கப்பட்ட பிறகு, கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் பூங்குழலி (ஐஸ்வர்யா லெக்ஷ்மி)அவரை ஒரு புத்த மடாலயத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள், அங்கு அவர் குணமடையலாம் என்கிற நம்பிக்கையில்.

இதற்கிடையில், நந்தினி, பாண்டியர்களுடன் சேர்ந்து சுந்தர சோழரையும் (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலனையும் ஒரே நாளில் கொல்ல முடிவு செய்கிறாள். சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை அடைய, கிளர்ச்சியை உருவாக்கிய மதுராந்தகனுடன் (ரஹ்மான்) உடன்படிக்கையை முறித்துக் கொள்ளும் சாக்கில் ஆதித்த கரிகாலனை கடம்பூர் கோட்டைக்கு அழைக்கிறாள்.

திட்டங்களை அறிந்த வந்தியத்தேவன், தனது அன்புக்குரிய குந்தவைக்கு (த்ரிஷா) செய்தியை அனுப்புகிறார். மற்றொரு மனதைக் கவரும் காட்சி இது. காதல் தருணங்களை எப்படிக் காட்டுவது என்பதை சமீபமாக தமிழ் சினிமா மறந்துவிட்டதாக நாம் நினைக்கிற வேளையில், சில முனைப்புருவ காட்சிகள் மற்றும் சிறிய வசனங்கள் மூலம் நாம் அதை மீட்டி விடலாம் என்பதை இயக்குனர் நிரூபித்திருக்கிறார். நிச்சயமாக அதை நிரப்புவதற்கு ஏ. ஆர். ரஹ்மானும் தேவை.

வந்தியத்தேவன் கண்ணை மூடிக்கொண்டு ஒரு சிறிய தீவில் வைக்கப்படுகிறான். குந்தவை அவரை விசாரிக்கிறார் அல்லது விளையாட்டு காட்டுகிறாள் எனலாம். மெதுவாக அவனை வட்டமிட்டு வாளால் தொந்தரவு செய்கிறாள். வந்தியத்தேவன் தன்னை பார்க்க முடியாது.

ஆனால் அவனுக்குத் தெரியும் வாளோடு யாருடைய கைகளை தொட்டு தொடங்கி தடவுகிறான் என முத்தங்கள் மற்றும் தொடுதல்கள் இல்லாத, நம்பிக்கை ஊட்டி, அதை அடைய விடாது ஏங்க வைக்கிற தருணத்தை உருவாக்குகிற ரசனை மிகு காட்சி.

தென்றலை தழுவியது போல் ஒலி வடிவில் உணர வைத்த அக நக பாடல், துரதிருஷ்டவசமாக இந்த ஜோடி மூலம் ஒளி வடிவில் காதல் ரசத்தை சொட்ட வைக்கவில்லை என்பது சோகம். இருப்பினும், நந்தினிக்கும் கரிகாலனுக்கும் இடையிலான பேரார்வ புயலுக்குள் நாம் தள்ளப்படுகிறோம்.

பொன்னியின் செல்வன் புத்தகம் மற்றும் திரைப்படம் இரண்டுமே கதாபாத்திரத்தை விட இந்த காதல் விவகாரத்தில் அதிக நேரத்தை செலவிடுவது விசித்திரமாக இருக்கலாம்.
சிக்கலான காதல் இல்லை என்றால் இந்த நாடகமும் இல்லை, பொன்னியின் செல்வனும் இல்லை.ஆதித்த கரிகாலன், நந்தினியின் சூழ்ச்சியை அறிந்த பிறகும், தனது வாழ்க்கையின் ஒரே அன்புடன், இறுதி மோதலுக்கு கடம்பூர் கோட்டைக்குச் செல்கிறான். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து விசித்திரமான உறவின் அனைத்து சிக்கல்களையும் ஒரு சேர கொண்டு வருகிறார்கள்.

இது பேரார்வம் கொண்ட துள்ளல் மற்றும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரு ஆபத்தான காக்டெய்ல் கலவையாகும். தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் சந்தித்த மோசமானதை வெளியே கொண்டு வருகிற தருணத்தில், ஒருவரை ஒருவர் வெறுக்க முடியாமல், வெளிக் கொணரும் ஐஸ்வர்யாவின் கதறல் மற்றும் மின்னலின் ஒளிரும் பொன்னியின் செல்வனின் வலிமையான கதாபாத்திரத்தின் முடிவுக்கு சரியான நீதியை வழங்கும் ஒரு காட்சி. படத்தின் மொத்த காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விடுகிறது.

உண்மையில் படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. கல்கியின் புதினப் படைப்பிற்கும், மணியின் திரைப்படைப் பிற்கும் சில முரண்களும், மாறுதல்களும் இருக்கத்தான் செய்கிறது. புத்தகத்தைப் படிக்காத ஒருவர் கதையை எப்படிப் பின்பற்றுவார் என்று கற்பனை செய்வது கடினம்.

பொன்னியின் செல்வனுக்கு வழக்கமான படக் கட்டமைப்பு இல்லை, ஏனெனில், பல கிளை கதைக்களங்களை கொண்ட படைப்பில் அது சாத்தியமில்லை. இது பொன்னியின் செல்வனைப் பற்றியது மட்டுமல்ல. ஆதித்த கரிகாலனைப் பற்றியும், வந்தியத்தேவனைப் பற்றியது.

கட்டமைப்பானது குழப்பமானதாகவும், கதையோடு அதை தொடர்ந்து பிடித்து செல்வதும் நமக்கு கடினமாகவும் இருக்கிறது. இருப்பினும், புத்தகத்தில் இல்லாத ஒரு சில சிறிய காட்சிகள் மூலம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தையும் மணிரத்னம் எவ்வளவு அற்புதமாக அடைகிறார் என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.
முடிவு அதிர்ச்சியூட்டும் வகையில் புத்தகங்களிலிருந்து வேறுபட்டது, படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங் களில் ஒன்றாக இருக்கும்.

நாம் திரைப்படத்தை ரசிக்க விரும்பினால், புத்தகத்தையும் அதன் அனைத்து திருப்பங்களையும் முழுவதுமாக மறந்து விடுவதே ஒரே வழி. பௌத்தம் பற்றிய பிரசங்கங்கள் முதல் தார்மீக இரண்டக நிலை மற்றும் கதையின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆயிரக்கணக்கானபக்கங் களில் தொகுக்க கல்கிக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.

கல்கியின் மெனக்கெடல் அவர் உருவாக்கிய தொடரின் சிக்கலான தன்மையை நமக்கு உணர்த்துகிற வேளையில், அதை திரைப் பிடிக்கும் வகையில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படத்தில் எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது நியாயமற்றது. எனவே, சமரசங்கள், சரி செய்தல் போன்றவற்றை திரையில் எதிர்பார்க்கலாம்.

இயக்குனர் தனது படைப்பிற்கு, படத்தை நகர்த்தி செல்லும் பணியில் பெரும்பாலும் உண்மையாகவே இருந்திருக்கிறார். பரந்து விரிந்து கிடக்கும் நாவலுக்கு, இதைவிட ஒரு நேர்த்தியான நீதியை வழங்கும் ஒரு தொடரை உருவாக்க, தமிழ் சினிமாவில் இருந்து யாராவது தோன்றுவதற்கு இன்னும் சில பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் அது வரை மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் நம்மிடம் பத்திரமாக இருக்கும்.

திரைப்படத்தின் மோசமான தருணம் இறுதி காட்சி. கல்கியின் புத்தகத்தில் கையாளப்பட்ட பல காட்சிகள், திருப்பங்கள் புனைவு என்கிறார்கள் – திரிபு என வாதிடுகிறார்கள். படைப்பை அப்படியே பரிமாறுவதில் சுவாரஸ்யம் இருக்காது என்பதை படக்குழுவினர் தீர்மானித்திருக்கலாம்.

எழுத்தாளர்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் குமரவேல் விவேகமான முறையில் இந்த பிரம்மாண்டமான காவியத்தின் தலைசிறந்த நாயகனாக அருள்மொழி, தியாகம் செய்யும் போது, இறுதியில் ஆற்றிய உரை மூலம் நமக்கு ஒரு இணக்கமான திருப்பத்தை அளித்தாலும். கல்கியை முழுமையாக வாசித்தவர்கள் இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

1950 -களில் கல்கி தனது பார்வையாளர்களை நம்பி, தன் படைப்பின் விதியையும் அதன் வினோதமான செயல்பாடு களையும் ஏற்றுக் கொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் எப்படி தயார் படுத்தினார் என்று நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

புதினத்தின் ஒரு முக்கிய திருப்பம், படத்தில் முற்றிலும் நீக்கப்பட்டதால், தீர்மானிக்கப்பட்ட முடிவு திருப்தியளிக்கும் படியாக இல்லை என பலர் கருதக்கூடும். போதுமானளவு திரைக்கதையைகட்டமைத்து,கதைக்களத்தை விரிவுப்படுத்தி இருந்தால் ஒருவேளை ஒத்துக்கொள்ளும் படியாக இருந்திருக்கும். நாவலைப் படித்தவர்கள் ஏன் என்று யோசிக்கிறார்கள். படிக்காதவர்கள் எப்படி என்று யோசிக்கிறார்கள். சோழப் பேரரசு எவ்வாறு விரிவடைந்தது என்பதைச் சுருக்கமாகக் கூறும் இந்த அளவிலான படத்திற்கு, இதை விட தந்திரமாகவும் சிறப்பாகவும் இருந்திருக்க வேண்டும் என எளிதாக சொல்லிவிட முடியும் நம்மால்.

ஆனால் பல தசாப்தங்களாக ரசிகர்களின் விவாதங்களுக்கு வழி வகுத்த நாவலில் உள்ள தெளிவற்ற தன்மைகள், திரைப்படத்தில் தீர்க்கமாக தீர்க்கப்பட்டுள்ளது. இல்லை யெனில் நாவலைப் படிக்காத பார்வையாளர்களுக்கு இது மிகவும் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருக்கும்.

ஒரு வரலாற்று புதினத்தில் சொல்லப்பட்ட தமிழ் சமூகத்தின் வீரம், காதல், நகைச்சுவை, துரோகம், மன்னிப்பு, தியாகம் போன்ற அனைத்து மனித மாண்புகளையும் உயிரோட்டமாக “இலக்கிய செல்லுலாயிடாக” அளித்த கல்கியின் கதையை, தனக்கே உரிய பாணியில் திரைக்கதை வடிவமைத்து “செல்லுலாயிட் இலக்கியமாக” தந்த மணிரத்னத்தின் திரைப்படத்தை ஒரு பாமர ரசிகனாக பாராட்டத்தான் தோன்றுகிறது.

...இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top