தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கப் பேரணி புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தொழிலாளர்களின் செம்படைப் பேரணி தெற்கு 4-ஆம் வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது.
சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இரண்டு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், ப.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிஐடிய மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி சார்பில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, க.ரெத்தினவேல், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.தர்மராஜன், ஏ.ராஜேந்திரன், வி.சிங்கமுத்து உள்ளிட்டோர் பேசினர். பேரணி-பொதுக்கூட்டத்தில் அதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மே தின வரலாறு…நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள். அவர்களை கௌரவிக் கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1-ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக உள்ளது. ஆனால் ஏன் மே 1-ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மே தினத்தின் முக்கிய நோக்கம்..முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால் தொடர்ந்து வேலை பார்த்து கொண்டே இருந்தார்கள், அதிலும் குறிப்பாக அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கவில்லை.இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில் 1886-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.
உழைப்பாளர்களின் எழுச்சி:தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து, முதலாளிகள் தங்களது உழைப்பை சுரண்டுகின்றனர் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்
போராட்டம்:அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள் சுமார் 3,50,000 பேர் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினர். மெக்சிகோவில் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பங்கேற்றனர்.இந்த போராட்டம் அமெரிக்காவை உலுக்கியது என்றே சொல்லலாம். இந்த போராட்டம் முதலில் அமைதியான முறையில் தான் நடைபெற்றது. ஆனால் இதில் பல தொழிலாளர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டனர்.
பின்னர் அங்கு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு 1890 -ஆம் ஆண்டு ஏற்று 8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.
மே தினத்தின் வெற்றி: தற்போது 80 நாடுகளுக்கு மேல் இந்த தினத்தை கொண்டாடிவருகின்றனர்.இந்தியாவில் முதன் முதலில் 1923-ஆம் ஆண்டு ம.சிங்காரவேலர் மெரினா கடற்கரையில் செங்கொடியை ஏற்றி கொண்டாடினார்.
இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் உழைப்பாளிகள் சிலை எழுப்பப்பட்டது. இது 1959 -ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா 1990 -ஆம் ஆண்டு மே தினப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது. இந்த உலகத்தில் புனிதமான ஒன்று இருக்குமானால் அது உழைப்பாளிகளின் வியர்வை துளிகள் அன்றி வேறெதுவும் இருக்க முடியாது.