சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாட்டினை இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு வெள்ளிக்கிழமை திருவொற்றியூரில் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது,
கடந்த 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் திருக்கோயி லில் கடந்த ஆண்டு பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை வழிபாடு கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் 12 கோயில்களில் ஏற்கனவே பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து நடப்பு நிதி ஆண்டில் மேலும் 5 திருக்கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்திட முடிவு செய்யப்பட்டு திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்,பட்டீசுவரம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை வழிபாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .
இதுவரை சுமார் 16,000 பெண்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டுள்ளனர். ரூ.10 லட்சத்திற்கும் மேலாக வருமானம் வருகின்ற திருக்கோயில்களில் 12 சதவீதம் நிர்வாக வசதிக்காக அறநிலையத் துறைக்கு அளிக்கப்படுகிறது.
அந்த நிதியிலிருந்து சம்பளம் போன்ற பணிகளுக்காக மீண்டும் அரசிடம் இருந்து நிர்வாக செலவாக திரும்பப்பெற்று திருக்கோயிலுக்கு செலவிடப்படுகிறது. இது தவிர கோயில் களின் பல்வேறு திருப்பணிகளுக்கு கோடிக்கணக்கான நிதியை தமிழக அரசே மானியமாக வழங்குகிறது.
பொதுமக்கள் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட திருக்கோயில் நிலங்களை எக்காரணத்தைக் கொண்டும் தனியாருக்கு தாரை வார்க்க இயலாது. பல்வேறு ஆதாரம் அற்ற புகார்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தாலும் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இந்து சமயங்கள் அறநிலையத்துறை தொடர்ந்து திறம்பட செயலாற்றி வருகிறது என்றா் அமைச்சர் சேகர்பாபு.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், திருவொற்றியூர்கே.பி.சங்கர், ஆணையர் க.வீ.முரளீதரன், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திருக்கோயில் உதவி அணையர்எம். பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.