Close
நவம்பர் 22, 2024 11:43 காலை

ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்படுமா புதுக்கோட்டை பேருந்து நிலையம்.. ?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலைய புறக்காவல் நிலையப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள்

புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கு பாதைகளை வழி மறித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்களும் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில், கடந்த 1966 -ல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரூ 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த 1981 -ல் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆட்சியில் ரூ.1.65 கோடியில் புனரமைக்கப்பட்டது.

இதில் 60 கடைகளும், 10 -க்கும் மேல்பட்ட தினசரி வாடகை அறைகளும் மூன்று கட்டணக் கழிப்பறை கழிப்பறைகளும் உள்ளன. பேருந்து வந்து செல்லும் கட்டணம், இரு சக்கர வாகன நிறுத்தம், கடை வாடகை உள்ளிட்ட இனங்களிலிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ 1 கோடி வரை நகராட்சிக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பெருகிவரும் தரை வழிப்போக்குவரத்து காரணமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்துள்ளதால் தற்போது பேருந்து நிலையத்துக்குள்  பல்வேறு ஆக்கிரமிப்புகளால்  இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்துகள் உள்ளே நுழைந்து வெளியேறுவதில் மிகவும் தாமதமாகும் நிலை  நீடித்து வருகிறது.

இதையடுத்து பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து புறநகர்ப்பகுதியில் வேறு ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம் என்ற முடிவில் இடத்தை பார்க்கும் நிகழ்வுகளும் கடந்த ஆட்சியில் நடந்தேறியது. அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து அதிருப்தியும் எதிர்ப்பும் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை உள்பட சில  நகரங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனவும் அதற்காக ரூ.174 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.  அதற்காக மாவட்ட நிர்வாகம் சாா்பில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்… சுகாதாரம்  காக்கப்பட வேண்டும்…

புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்து திறப்பு விழா காண ஓரிரு ஆண்டுகள் ஆகும். அதுவரையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. ஆனால்,  தற்போது நடைபெறும் காட்சிகளைப் பார்க்கும் போது,  வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையிலேயே பேருந்து நிலையம் இருந்து  வருகிறது.

குறிப்பாக பேருந்து நிலையத்தின் மத்திய பகுதியில் திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுகாதாரக்கேட்டின்  ஊற்றுக் கண்ணாகவே இருக்கிறது. அருகில் தான் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் இயங்கு வந்தாலும், அப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதைப் பார்க்கும் போது வேதனைய ளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை யாரும் கண்டு கொள்ளவில்லை. இடையூறாக உள்ள கடைகளை அகற்ற யாருக்கும் அதிகாரம் இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், இந்த இடத்தை வாடகைக்கு விட்டிருப்பதைப் போல நினைக்கத் தோன்றுகிறது. காரணம் இந்த கடைகளுக்கு மின்சாரம் முதல் சேமிப்பிடம் வரை புறக் காவல் நிலையம்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக புறக்காவல் நிலையத்தின் சாவியை இவர்களிடம் கொடுத்து விட்டதைப் போலவும்  நினைக்கத் தோன்றுகிறது என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top