Close
நவம்பர் 22, 2024 5:28 மணி

பிளஸ் 2 தேர்வு: விருதுநகர் மாவட்டம் முதலிடம்.. தமிழில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்.. 326 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

சென்னை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்ட கல்வி அமைச்சர் அன்புில் மகேஷ் பொய்யாமொழி

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார்.

அதில், மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.  தமிழ் பாடத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழகத்தில் 326 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார். 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

www.tnresults.nic.inwww.dge.tn.gov.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன. தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,325 மையங்களில் கடந்த மார்ச் 13 ந்தேதி முதல் ஏப்ரல் 3 ந்தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் 1, 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர், இதில் மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 013, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 ஆகும். பல்வேறு காரணங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451, இது 94.03 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவிகள், 4 லட்சத்து 5 ஆயிரத்து 753, (96.38) சதவீதம், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 697, (91.45 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 93.76 சதவீதமாக இருந்தது.

விருதுநகர் முதலிடம், ராணிப்பேட்டை கடைசி:

விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2வது இடத்தையும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 87.30 சதவீதத்துடன் ராணிப் பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதிய மொத்தமுள்ள 7499 மேல்நிலைப் பள்ளிகளில், 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,767 ஆகும். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 326 ஆகும். தமிழ் பாடத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 89.80%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%, தனியார் சுயநிதி பள்ளிகள் 99.08%ம் பெற்றுள்ளது.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 96.32%, வணிகவியலில் 91.63%, கலைப்பிரிவுகள் 81.89%, தொழிற்பாடப் பிரிவுகள் 82.11% தேர்ச்சி் பெற்றுள்னர்.தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 4398 ஆகும். இதில் 3923 மாணவர்கள் (89.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் 79 பேர் (87.78%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 17 -ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டுள் ளோம். இவ்விரண்டையும் ஒரே நாளில் வெளியிடலாமா என ஆலோசித்து வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழில் 2 மாணவிகள் 100க்கு 100:தமிழ் பாடத்தில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாணவி நந்தினி, அரக்கோணம் மாணவி லக்‌ஷயா ஸ்ரீ ஆகியோர் தமிழ்ப்பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 812 பேர் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல வேதியியல் 3909 பேரும், உயிரியல் 1494 பேரும், கணிதம் 690 பேரும், தாவரவியல் 340 பேரும், விலங்கியல் 154 பேரும், கணினி அறிவியல் 4618 பேரும்,

வணிகவியல் 5678 பேரும், கணக்கு பதிவியல் 6573 பேரும், பொருளியியல் 1760 பேரும், கணினிப் பயன்பாடுகள் 4051 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32,501 ஆகும். இது கடந்த ஆண்டு 23,957 ஆக இருந்தது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்;

கணினி. அறிவியலில் உச்சம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 97.76 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடத்தில் 98.47 சதவீதம் பேரும், கணிதப் பாடத்தில் 98.88 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 98.04 சதவீதம் பேரும்.

விலங்கியல் பாடத்தில் 97.77 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.29 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 96.41 சதவீதம் பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் 96.06 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top