Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

பிளஸ் 2 தேர்வில் சாதனை மாணவி நந்தினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை

பிளஸ்2 தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

சாதனை மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் (மே 9 ) முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச.நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச.நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

உயர்கல்விக்கு உதவி

மாணவி ச. நந்தினி, முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன்  முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது முதலமைச்சர், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார் உடனிருந்தனர்.

யாராலும் திருடமுடியாத சொத்து கல்வி

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன்.

மே 8 ல் வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் “படிப்பு தான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்” எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன்.

எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.

“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்”இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top