புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமல் திமுகவைச் சார்ந்த ராங்கியர் என்ற பிரிவினருக்கு வழங்கி உள்ளதை கண்டித்தும், அதனை ரத்து செய்து உடனடியாக ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டவர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்களான (மாள்சுத்தியர், ராங்கியர், விளங்கண்டார், வாண்டார், சிங்கம்புலி, வலங் கொண்டார், மழவரராய், பிள்ளைமார்கள்) ஆகிய எட்டு பிரிவினர்கள் ஒன்று கூடி ஊர் பொதுமக்களால் சங்கம்விடுதி என்று ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் சென்ற ஆண்டு முதல் மேற்கண்ட ஒரு பிரிவினரான ராங்கியர்கள் கோவில் எங்களுக்குத் தான் சொந்தமானது என்றும் ஜல்லிக்கட்டு நாங்கள் மட்டுமே நடத்துவோம் என்றும் கூறி ராங்கியர்கள் சங்கம் விடுதி என்று வட்டாட்சியரிடம் ஜல்லிக்கட்டு நடத்த மனு கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வழக்கம்போல் ஊர் பொதுமக்கள் சங்கமம் விடுதி என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்த மனு கொடுத்தனர். இரண்டு மனுக்கள் சென்றதால் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
அதில் வட்டாட்சியர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வழக்கத்திற்கு மாறாக திமுகவைச் சேர்ந்த ரங்கயர் என்ற பட்டத்தை இணைத்து ராங்கிர் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனுமதி கொடுத்துள்ளனர்.
இதனால் ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஊர் பொதுமக்கள் பங்கு பெறாமல் புறக்கணித்து விட்டதாகவும் அதே போன்று இந்த வருடமும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மனுக்களாக சென்ற பொழுது மீண்டும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது.
அதில் புதிதாக வந்த வட்டாட்சியர் உயர்நீதிமன்ற உத்தரவு மீரி தனிப்பட்ட ஒரு பிரிவினருக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆணை பிறப்பித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருவதாகவும் ஒன்றாக இணைந்து ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு நடத்தி வந்த நிலையை மாற்றி தற்பொழுது கிராமத்தில் பல்வேறு பிரிவினருக்கிடையே பிரச்சனையை தூண்டி விடுவதாகவும் திமுக கட்சியைச் சார்ந்த ராங்கியர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே ஆண்டாண்டு காலமாக ஊர் பொதுமக்கள் சங்கம் விடுதி என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.
அப்போது மீண்டும் கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது அதில் பேசி தீர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.