Close
நவம்பர் 22, 2024 5:31 மணி

மாவட்ட மனநல திட்டம் சார்பாக உலக செவிலியர் நாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மனநலத்திட்ட மையத்தில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழா

புதுக்கோட்டை டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட மனநல மையத்தில்  மாவட்ட மனநல திட்டம் சார்பாக  உலக செவிலியர்கள் நாள் வெள்ளிக்கிழமை(மே.12)கொண்டாடப்பட்டது.

இதில், மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் பேசியதாவது: நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவருமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்  பிறந்த நாள் உலக செவிலியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் பிரிட்டிஷ் செல்வக் குடும்பத்தில் பிறந்தார் (1820). வீட்டிலேயே ஜெர்மன், லத்தீன், ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கற்றார். ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டிருந்த இந்த சிறுமிக்கு 16 வயதை நெருங்கும்போது, செவிலியராக சேவையாற்றுவதுதான், இறைவன் தனக்கு விதித்துள்ள பணி என்று உறுதியாக நம்பினார்.

17 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை நிராகரித்து, செவிலியராக சேவையாற்றப் போகிறேன் என்ற தனது முடிவை அறிவித்தார்.

ரஷ்யப் பேரரசுக்கும் பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே நடந்த போரில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வந்த கிரீமியாவுக்குச் சேவையாற்ற  குழுவினருடன் சென்றார்.

அங்குள்ள மருத்துவமனையில் இரவின் இருளில் கையில் விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு நோயாளியாகச் சென்று பார்த்தார்.

காயம்பட்ட போர் வீரர்கள் தங்களைக் காக்க வந்த தேவதையாக இவரைப் போற்றினர். ‘த லேடி வித் தி லாம்ப்’ என்றும் ‘தி ஏஞ்சல் ஆஃப் தி க்ரிமியா’ எனவும் பாசத்துடன் இவரைக் குறிப்பிட்டனர்.தான் பெற்ற அனுபவங்களை மொத்தம் 830 பக்கம் கொண்ட குறிப்புகளாக எழுதிவைத்தார். அது நூலாக வெளிவந்தது.

அவருக்குப் பரிசுகளும், ரொக்கமும் வழங்கப்பட்டன. அந்தத் தொகையை கொண்டு, லண்டனில் செயின்ட தாமஸ் மருத்துவமனையைத் தொடங்கினார். அங்கு ‘நைட்டிங்கேல் ட்ரெய்னிங் ஸ்கூல் ஃபார் நர்சஸ்’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

அவரது பிறந்த நாளில் மகத்தான செவிலிய சேவை புரியும் அனைத்து செவிலியர்களுக்கும்  நன்றியும் வாழ்த்துகளையும் கூறுவதில் பெருமை கொள்கிறேன் என்றார் டாக்டர் கார்த்திக்தெய்வநாயகம்.

இதையடுத்து, செவிலியர்கள் தங்களுடைய நெகிழ்ச்சியான பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட மனநலத் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top