தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா. குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சியில் அமர்த்திய தலைவர், ‘தமிழ்நாடு’ என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தவர், சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியவர், பேச்சாற்றல் மூலம் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வந்தவர் என்று புகழப்படும் அறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் ‘காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை’ – சி.என்.அண்ணாதுரை -யை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள உதவும் அரிய புத்தகம் இது.
இன்றைய கழக உடன்பிறப்புகள் எத்தனை பேருக்கு திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியும் ?திராவிட மாடல் பற்றி பேசுவதற்காகவாவது திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்திருக்கவேண்டும். அதற்கு இந்த நூல் நிச்சயம் பயன்படும்.
இரா. கண்ணன் ஆங்கிலத்தில் எழுதிய Anna-The life and times of C.N.Annadurai நூலின் தமிழாக்கம் இது. தமிழ் வடிவம் மூலநூல் போன்றே ஆக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர், சர்வதேச உறவுகளைப் பற்றி அறிந்தவர், வெளிநாட்டுப் பலகலைக் கழகங்களில், பயின்று, பணியாற்றிய அனுபவமுள்ள கண்ணன், இந்நூலை அண்ணாவை புகழ்வதற்காக எழுதாமல் அவரைப்பற்றி அனைவரும் புறிந்துகொள்ளும் நோக்கில் எழுதியிருக்கிறார்.
வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என்று மூன்று பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ள இந்த வாழ்க்கைச் சரிதம் நவீன இந்தியாவின் கவர்ச்சிகரமான தலைவராக, திராவிட இயக்கத்தின் வலிமைமிக்கவராக , தி.மு.கவின் நிறுவனராக பரிமளித்த அண்ணாவின் பன்முகங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. தவிர எல்லோராலும் போற்றப்பட்ட பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அவர் கொண்டிருந்த ஆற்றலைப்பதிவு செய்கிறது.
திராவிட இயக்கத்தைப் பற்றிய சர்ச்சைகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. பெரியாரிடம் அவர் கொண்டிருந்த சிக்கலான உறவுகளையும் ஆய்வு செய்கிறது.அண்ணா குறித்து கண்ணதாசன் , ஜெயகாந்தன், பி.ராமமூர்த்தி போன்றவர்களின் பார்வையும், ராஜாஜி , காமராஜ் , எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற தலைவர்களின் நினைவு களும் இந்த நூலில் இடம்பெறுகின்றன.விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
—-பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை.