புத்தகத் திருவிழாவிற்கான அறிவிப்பையும், பதாகையையும் வியாழக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.கருணாகரன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், டி.விமலா, மு.கீதா உளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது:
100 அரங்குகள்: தமிழ்நாட்டின் முக்கியமான புத்தகத் திருவிழாக்களில் ஒன்றாக புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விளங்குகிறது. 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் வாசகர்களின் பார்வைக்காக வைக்கபட உள்ளன. அரங்குளில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் கண்காட்சிகளும் இடம்பெற உள்ளன.
தினமும் காலையில் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. மாணவர்களுக்கான கோளரங்கம், எளிய அறிவியல் நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடன் உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சிகள்: மாலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், அறிவியலாளர்களின் உரைவீச்சுகள் நடைபெறுகிறது. படைப்பாளிகளுக்கான இலக்கிய விருதுகளும், வாககர்களுக்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள், பொதுமக்களிடம் வாசிக்கும் பழகத்தை அதிகப்படுத்துவதும், புத்தக விற்பனையை அதிகரிப்பது, அறிவியல் மனப்பாண்மையை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.