Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

இடைவிடாது போராடிய நமக்கு இன்று நல்ல விடை கிடைத்திருக்கிறது: முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

தமிழ்நாடு

உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்று முகநூலில் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு என்பது வெறும் போட்டி அல்ல.தமிழர்களின் பாரம்பரியம்; கலாசாரம்.இது வெறும் வழக்கு மட்டுமல்ல
எங்களின் வாழ்க்கை.அதனை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என இடைவிடாது போராடிய நமக்கு இன்று நல்ல விடை கிடைத்திருக்கிறது என   முன்னாள் அமைச்சர் விராலிமலை எம்எல்ஏ  டாக்டர் சி.விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக  அவரது முகநூல் பதிவு...

நம் ஊனில், உயிரில், உதிரத்தில் கலந்திருக்கும் ஜல்லிக்கட்டு வழக்கில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “நாடே எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை வழங்கி தமிழ் மண்ணை, மக்களின் இதயங்களை குளிர வைத்திருக்கிறது.”

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நம் மண்ணின் மக்களின் உணர்வுகளில் இரண்டற கலந்திருக்கும்ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டிட உறுதியோடு துணை நின்ற,  பாரத பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi )-க்கும், முன்னாள் முதல்வர்; கழக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K. Palaniswami) க்கும்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman)-க்கும்,  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய அரசின் விலங்குகள் நல வாரிய மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர்.எஸ்.கே. மிட்டல் -க்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தபோது, நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டிட பல்வேறு அமைப்புகள் மனுதாக்கல் செய்தன; என் தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய நானும் இடையீட்டு மனு ஒன்றை கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தேன்.

இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நேரடியாக டெல்லி சென்று, ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர்  பி.ஆர் -உடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தருணங்கள் யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் ஆணித்தரமாக நம் உணர்வுகளை பிரதிபலித்த ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக்குழுவினர் மனுவுக்கு ஆஜரான முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து அவர்களுக்கும்,

நான் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் ஆஜராகி, “ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மண்ணின்; மக்களின் உதிரத்தில் கலந்திருக்கும் கலாசார பெருவிழா என்பதையும், இதனை தமிழக அரசு, இந்திய அரசு, ஏன் நீதி மன்றங்களும் ஏற்றுக்கொண்டு சட்டமாக்கிய பின்னரும்; பீட்டா போன்ற அமைப்புகள் எங்கோ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அலுவலகங்களில் அமர்ந்துகொண்டு எங்கள் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்?” என உணர்வுப்பூர்வமாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத் ராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த அன்பை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு நம் அடையாளம்;அதற்கு எத்தகைய தடை வரினும் அத்தனையையும் தகர்த்தெறிய உறுதியோடு களம் நின்ற அத்தனை அமைப்புகளுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நம் உறவுகளுக்கும் என்மனப்பூர்வ நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இது நமக்கான வெற்றி… நம் மண்ணுக்கான வெற்றி…நம் மக்களுக்கான வெற்றி…மகிழ்ச்சியோடு கொண்டாடு வோம். என முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதிவிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top