பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி தொடங்கியதன் மூலம் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான ஆதாரங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு இராஜேந்திரன் பொற்பனைக் கோட்டையில் அகழ்வாய்வு நடத்த வேண்டுமென வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கினை வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் நடத்தி இரு நபர் நீதிபதிகள் அமர்வில் விசாரணை முடிவில் பொற் பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து , தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் முதல் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து விரிவான அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென தொல்லியல் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு அவர்களிடம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கடந்த 2021 -ஆம் ஆண்டு அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ச்சியாக ஓராண்டுக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஆய்வுத் துறையின் அனுமதி பெற்றதை யடுத்து, அகழாய்வை மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்ற நிலையில்,தொல்லியல் துறை அமைச்சர் முறைப்படி முதல்கட்ட அகழ்வாய்வு பணியினை தொடங்கி இன்று(20.5.2023) வைத்தார்.
நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை எம்.சின்னதுரை , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் (பொ), பேராசிரியர் கா.ராஜன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
பொற்பனைக்கோட்டையின் சிறப்பு குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வுகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இலக்கியத்தில் உள்ள தகவல்களும் வாழ்வியல் செயல்பாடு களும், வாழ்க்கை முறைகளும், இலக்கியத்தில் உள்ள நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. மேலும் நமது இலக்கியச் சான்றுகள் கற்பனை கதைகள் அல்ல என்பதை எடுத்துக் கூறுவதாக அமைகிறது.
இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகள் கரிம சிதைவு காலக்கணிப்பு பரிசோத னைக்கு சர்வதேச பரிசோதனை நிலையங்களான பீட்டா உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த ஆய்வு நிறுவனங்களிலிருந்து காலக் கணிப்புகள் முடிவு செய்யப்படுகின்றன.இதனால் சர்வதேச அளவில் தமிழக வரலாறும், மொழியியல் வரலாறும், புத்துயிர் பெற்று வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் பெரும் பாலும்புதையிடங்களாக இருந்த நிலையில்,கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மனித வசிப்பிடங்கள், தொழில்கூடங்கள், ஆகியவற்றை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
பொற்பனைக்கோட்டை என்பது ஒரு நிர்வாகத் தளமாக இருந்திருக்க வேண்டும். எனவே தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு நிர்வாக தளத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வு இதுவாகவே உள்ளது.
கடந்த பல வருடங்களாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் மூலம் ஆம்போரா ஒத்த குடுவையும், ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் கிடைத்த கூரை ஓடுகளுக்கு இணையான, ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
பொற்பனைக்கோட்டையில் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய மட்பாண்டங்கள், மண்பாண்டத்தாலான நீருற்றும் குடுவை குமிழ், காதணி , குவார்ட்சைட் மணிகள், பச்சை, ஊதா வண்ண சூது பவள மணிகள் , இரும்பாலான கூரை ஆணி என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அகழய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரண்மனை மேடு அக அகழியின் உட்பகுதியில் இருப்பதால் , கட்டுமானங்கள், உபயோகித்த பொருட்கள், வெளிநாட்டு தொடர்பு ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் மணிகண்டன்.