Close
நவம்பர் 22, 2024 12:03 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தின் 44 வது ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா பொறுப்பேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தின் 44 -ஆவது ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா,  திங்கள்கிழமை (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரால்  சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தும் விரைவாகவும், துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்  மெர்சி ரம்யா .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட .மெர்சி ரம்யா  2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2016 -ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக ஈரோடு மாவட்டத்திலும், 2017-2019 -ஆம் ஆண்டில் திண்டிவனம் சார் ஆட்சியராகவும், 2019-2021 -ஆம் ஆண்டில் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) கன்னியாகுமரி மாவட்டத்திலும் 2021-2023 -ஆம் ஆண்டில் வணிக வரித்துறையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் 44 -ஆவது  ஆட்சித்தலைவராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை
புதிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்த பணிமாறுதலாகி செல்லும் ஆட்சியர் கவிதா ராமு

புதிய மாவட்ட ஆட்சிராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மெர்சி ரம்யாவுக்கு, முன்னாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.

இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் சாதனை படைத்த (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்) மெர்சி ரம்யா.

2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்ட நேர்முகத் தேர்வு முடிவுகளில், தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் சென்னை மாணவி யான மெர்சி ரம்யா 32-ஆவது இடத்தில் வென்று  சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். மேலும் தமிழக அளவில் இவர் 2-வது இடத்தைப் பிடித்தார்.

பி.இ. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) சென்னையில் படித்து முடித்த பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வந்த இவர் தனது மூன்றாவது முயற்சியில்  வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

வெற்றி பெற்றவுடன் அவர் கூறியதாவது, மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், பெண் கல்வியிலும் கவனம் செலுத்துவேன் என்றும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த தன்னால் முயன்றவரை முயற்சி செய்வேன் என்ற தனது லட்சியத்தை அப்போதே குறிப்பிட்டவர். இவரது தந்தை ஐசக் சாமுவேல் வழக்குரைஞராக உள்ளார். தாயார் பொன்முடி சுடரொளி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top