Close
நவம்பர் 23, 2024 2:54 காலை

தினமணி முன்னாள் இராம. திரு சம்பந்தம் 89-ஆவது பிறந்த நாள் விழா

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சி நூலகத்தில் நடைபெற்ற தின்மணி முன்னாள் ஆசிரியர் ராம.திருசம்பந்தம் 89 -ஆவது பிறந்த நாள் விழா

தமிழக அரசு பொது நூலகத் துறை மற்றும் சோம.லெ. அறக்கட்டளை இணைந்து தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராம.திருஞானசம்பந்தம் அவர்களின் 89 -ஆவது பிறந்த நாள் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் உள்ள சோம.லெ. நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் தே. ஜான் ஜாமுவேல் தலைமை வகித்தார்.

இதில், காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவர் கம்பன் அடிபொடி பழ.பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

நெற்குப்பைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. மாவட்ட வாரியாக வரலாறுகள் மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, தொழில் வாய்ப்புகள் குறித்து பதிவு செய்த சோம.லெ. இந்த மண்ணில் பிறந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணங்களை இன்றைய இளம் தலைமுறையினர் எளிய முறையில் அறியும் வண்ணம் பல்வேறு நூல்களை இயற்றிய தமிழண்ணல் பிறந்த ஊரும் இதுதான்.

அடுத்ததாக பத்திரிக்கைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்த ராம.திருஞானசம்பந்தம் பிறந்த ஊர் நெற்குப்பை. இவர் எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டது கிடையாது. செயலில் தனது பணி மேம்பட வேண்டும் என எண்ணியவர். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர்.

இன்றைய இளம் தலைமுறையினர் பொழுதுபோக்குக்காக இணையங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு தரவுகள் இணையத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அனைவருக்கும் திறமை உண்டு. அதனை வெளிப்படுத்த கல்வி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பாடத்தைத் தாண்டி பிற துறை தொழின்ர் வேலைவாய்ப்பு நூல்களையும் தேடிப்படிக்க வேண்டும். அப்போது சாதனையாளராக மாற முடியும் என்றார் அவர்,

விழாவில், மதுரை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் அழ. சோமசுந்தரம் பேசியதாவது; அர்ப்பணிப்பு, எளிமைக்கு உதாரணம் ராம.திரு.சம்பந்தம் தான். மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக, தினமணி முன்னாள் ஆசிரியர் ராம.திருசம்பந்தம் உருவப் படத்துக்கு மாவை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்ட நூலகத் துறை ஆய்வாளர் எஸ். சண்முகசுந்தரம், திருப்பத்தூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக, சோம.லெ. நினைவு கிளை நூலகத்தின் நூலகர் மீ.அகிலா வரவேற்றார். வ.செ.சிவலிங்கம் அரசுக் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ச.முருகேசன் நன்றி கூறினார்.

சிறு குறிப்பு… தனது ஊருக்கு அருகே உள்ள ஆ,தெக்கூரில் கருமுத்து தியாகராஜ செட்டியாரால் நிறுவப்பட்ட  விசாலாட்சி கலாசாலை பள்ளியில் 6  -ஆம் வகுப்பு முதல் 11 -ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

பின்னர், மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டம் படித்து முடித்தார்.  படித்து முடித்த ஓரிரு மாதங்களிலேயே  கருமுத்து தியாகராஜ செட்டியார் நடத்திய  தமிழ்நாடு பத்திரிகையில் சேர்ந்து தனது பத்திரிகை வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாளில்  இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றி ஆழமான தடம் பதித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top