Close
நவம்பர் 22, 2024 6:14 மணி

அதிகாரிகளை நம்பாத திமுக அரசு…தமாகா விமர்சனம்

தமிழ்நாடு

தமாகா இளைஞரணி தலைவர் எம். யுவராஜா

திமுக அரசு அதிகாரிகளை நம்பாமல் ஒவ்வொரு  மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களை  நியமித்து வருவதாக என்று .தமாகா விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பதற்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு 23.05.2023 அன்று  ஆணை வெளியிட்டுள்ளது.

ஒரு மாநிலத்தை திறம்பட ஆட்சி செய்யும் முதல்வர் என்றால், ஒரு மாவட்டத்தின் முதன்மை குடிமகனாக விளங்கும் மாவட்ட ஆட்சியர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், காவல்துறை கண்காணிப்பாளர், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசு அதிகாரிகளாக பணியாற்றும் வட்டாட்சியர், தாசில்தார், வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவரும் தங்களால் மாவட்டத்திற்கு நியமிக்கப்படும் பொறுப்பு மிக்க அரசு அலுவலர்கள். அவர்களை நம்பாமல் இருப்பது ஏன்?.

மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் என்ற பெயரில் தங்களுடைய இயக்கம் வலுபெறாத இடங்களில், வருவாய் எப்படி எல்லாம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு, சிந்தாமல் சிதறாமல் ஊழல் பணத்தை தலைமையிடம் கொண்டு சேர்ப்பதற்காக, பொறுப்பு அமைச்சர்களை நியமித்ததாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள் என்னவென்று சொல்வது. பொறுப்பான அமைச்சர்களாக இருக்க வேண்டியவர்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள், அதுவும் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இளைஞர்களின் வாழ்வோடு தொடர்புடைய மூத்த அமைச்சர் உள்ள மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் நடப்பது நல்லாட்சியா? கள்ளச்சாராய ஆட்சியா? என்று சொல்லும் அளவிற்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை கூற வந்தால், ஒரு அமைச்சர் ஜாதி பெயரை கேட்கிறார், மற்றொரு அமைச்சர் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என்று மகளிரை பார்த்து ஏளனமாக கேட்கிறார்.

இந்நிலையில் இதற்கு முன் அமைச்சராக இருந்த ஒருவர் மக்களை நோக்கி கல் எடுத்து வீசி எறிகிறார். யார் இலவசத்தை கேட்டது? நீங்களாகவே கொடுப்பீர்கள், நீங்களாகவே அவமானப்படுத்துவீர்களா?.

அரசு அதிகாரிகளை நம்பாமல் பொறுப்பு அமைச்சர்களை மட்டுமே நம்பி ஆட்சி செய்யும் அரசாக செயல் படுமேயானால், அரசு அதிகாரிகள் எதற்கு? இனி வரும் காலங்களில் அரசு அதிகாரிகளை மதித்து அனைத்து பொறுப்புகளையும் வழங்க வேண்டும்.

அப்போதுதான் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் அமையும். மேலும் பொதுமக்களும் தங்களின் தேவைகளை அரசிடம் தெரிவித்து பயனடைவார்கள் என  யுவராஜா குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top