Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

புதிய பாராளுமன்ற கட்டிடம்… செங்கோல் ஏந்தி பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதுதில்லி

புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்து செங்கோல் நிறுவுகிறார் பிரதமர் மோடி

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை செங்கோல் ஏந்தி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பில் அனைத்து மத பிரார்த்தனை.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடைபெற்றது. சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்று அனைத்து மத பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

புதுதில்லி
நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற அனைத்து மதகுருமார்கள்

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன.

மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று காலையில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் திறப்பு விழா தொடங்கியது. மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்படுகிறது.

இதற்காக யாக சாலை பூஜையில் செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. செங்கோல் முன்பாக பிரதமர் மோடி விழுந்து வணங்கினார்.

புதுதில்லி
செங்கோலை வணங்கிய பிரதமர் மோடி

இதையடுத்து, அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் செங்கோலை வழங்கினர்.செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார். அதன்பின்னர் ஓதுவார்கள் முன் சென்று தமிழ் மறைகள் ஓதினர். இசை வாத்தியங்கள் முழங்க. பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை ஏந்தியபடி புதிய பாராளுமன்றத்திற்குள் சென்றார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை வைத்தார்.

அதன்பின்னர் அங்கு குத்துவிளக்கேற்றினார்.  அதன்பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான கல்வெட்டை பிரதமர் திறந்து வைத்தார்.  சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடனிருந்தார். இதையடுத்து பாராளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கௌரவித்தார். கட்டுமானப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top