1947 -ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்ற பொழுது இருந்த இந்தியாவுக்கும், 2023 -ல் இருக்கிற இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. உணவு பஞ்சத்தால், வறுமையின் பிடியில் சின்னாபின்னமாக, கசக்கி சக்கையாக பிழியப்பட்ட நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்று, நாட்டு மக்களின் ஆரம்ப கால நிலையை மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் மிக மெச்சக்கூடியவை.
பல தேசங்களுக்கு பயணித்து, அவர் எடுத்த முயற்சிகளால் உணவு பொருட்களை நம் நாட்டிற்கு வரவழைத்தார்.பொருளா தாரத்தை தூக்கி நிறுத்த சோசியலிசத்தின் சிறந்த அம்சங்களை கொண்டு ஒரு பொருளாதார கொள்கையை வகுத்தார். அந்த கொள்கையின் படி நாட்டில் தொழிற் சாலைகள் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன.
நிலங்களை உழவு செய்பவர்களின் கையில் கொடுத்தமை, பசுமை புரட்சி, விவசாயிகளுக்கு கடன் உதவி போன்ற திட்டங்கள் கொண்டு வந்ததால், நாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவை பெற்றது. பல அணைகளை கட்டியதால் பாசன திட்டங்கள் விருத்தி பெற்றன. கல்வி, மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம் , உள்கட்டமைப்பு இப்படி பலவற்றில், இன்று நாம் அறுவடை செய்துக் கொண்டு இருப்பது நேரு வைத்த விதையால் தான்.
நவீன இந்தியாவை கட்டமைக்க முயன்றவர் நேரு. அதிலும் பெண்களுக்காக அவர் செய்தது ஏராளம். பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து செய்யும் உரிமை, தனியாக தத்தெடுக்கும் உரிமை, வேலைக்கு போவது, தன் சம்பாதியத்தை தானே வைத்துக் கொள்ளும் உரிமை எதுவும் இல்லாத சூழல் நிலவிய காலம். பெண்களுக்கு இவற்றை பெறும் உரிமை இருந்ததில்லை. இந்த விதிகளை இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்கள் மட்டுமல்ல இந்து, சமண, பௌத்த அரசர்கள் கூட மாற்றத் துணியவில்லை.
கல்வி என்பது கலை, கலாச்சாரம் மற்றும் நமது பண்பாடு களை தாங்கியது என்றுணர்ந்த நேரு, கல்வி என்பது கல்வியாளர்களை அல்லது அறிவை வளர்ப்பதற்குமட்டுமான தாக இருக்கக்கூடாது என்பதை உறுதியாக நம்பினார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளை காப்பதற்கு நேரு முன்னுரிமை கொடுத்தார். இப்படியான உயர் சிந்தனை பெற்றவர் என்பதாலேயே ஜவஹர்லால் நேரு, ‘சுதந்திர இந்தியாவின் நவீன கல்வி முறையின் சிற்பி’ என்று கருதப்பட்டார்.
அவருடைய அரசியல் வாழ்க்கையில் சில சோடைப்போன திருப்பங்களும், முடிவுகளும் கூடவேஆதாரமற்ற தனிப்பட்ட வாழ்க்கை அவதூறுகளும் இருந்தன. ஒரு பாரம்பரியமிக்க மேற்கத்திய சிந்தனை கொண்ட ஆளுமை, பொது வாழ்க்கைக்கு வருகிற போது ஏற்படுகிற தவிர்க்க முடியாத விமர்சனங்கள் அவை. அவற்றில் சில நிதர்சனமானவை என்பதும் கசப்பான உண்மை.
நேரு தன்னுடைய வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார். உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு.. போன்றவை. இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக மட்டும் பெருமை சேர்க்காமல் அவருக்கு நல்ல பெயரையும் தேடி தந்தது.
நேரு அரசியல்வாதியானதால், நம் தேசம் ஒரு சிறந்த இலக்கியவாதியை இழந்துவிட்டது என்பதை அவரது எழுத்தாளுமையை உணர்ந்தவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋