Close
நவம்பர் 25, 2024 7:03 காலை

குடிமனைப் பட்டா கேட்டு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ஆலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் மனைப்பட்டா கேட்டு அளிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மனுக்களை எம்எல்ஏ எம்.சின்னதுரை முன்னிலையில் வட்டாட்சியர் காமராஜ் பெற்றுக்கொண்டார்.

குடிமனைப் பட்டா கேட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.சின்னதுரை எம்எல்ஏ  தலைமையில் செவ்வாய்க்கிழமை  போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவில் 36 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்தமாக வீட்டுமனைப் பட்டா இல்லை. இதில் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்துப் பகுதியினரும் அடங்குவர்.

இவர்கள் காலம் காலமாக பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டு; மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கொடுத்து வலியுறுத்தி வந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடம் இதற்காக பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது.

ஆனாலும், இவர்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. இதற்கு நத்தம் தவிர வேறுவகையான புறம்போக்குகளில் குடியிருப் பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளனர். ஆனால், நத்தம் புறம்போக்கில் வசிப்பவர்களுக்குக்கூட பல இடங்களில் பட்டா வழங்கப்படவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது.

இந்நிலையில், எந்தவகையான புறம்போக்காக இருந்தாலும் அந்த இடத்தில் பல வருடங்களாக குடியிருந்து வருபவர்க ளுக்கு வகைமாற்றும் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க் கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
குடிமனைப் பட்டா கேட்டு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ஆலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை வெள்ளைமுனியன் கோவில் திடலில் இருந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், கந்தர்வ கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொள்ளவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும் மாவட்டத்தில் இருந்து உயர் அதிகாரிகள் யாரும் வராததால் மனுதார்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களி;டம் பேசிய வட்டாட்சியர் கே.காமராஜ், உங்கள் மனுக்கள் அனைத்தும் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வகைமாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கப்படும். முதல்கட்டமாக தற்பொழுது 50 நபர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றும் மீதமுள்ள மனுக்கள் மீது அடுத்த ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து மனைப்பட்டா கேட்டு அளிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மனுக்களை எம்எல்ஏ எம்.சின்னதுரை முன்னிலையில் வட்டாட்சியர் காமராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எம்.சின்னதுரை எம்எல்ஏ கூறியதாவது: அதிகாரிகள் முதல்கட்டமாக 50 பேருக்கு பட்டா கொடுக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது.

இங்கே அளிக்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வகைமாற்றம் செய்ய வேண்டிய பணிகளை உடனடியாக அதிகாரிகள் தொடங்க வேண்டும்.

எந்தவித சாக்குப் போக்கும் சொல்லாமல் குடிமனை இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா கொடுப்பதற்கான அனைத்து வழிகளையும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்ட  நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் எம்எல்ஏ சின்னத்துரை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top