Close
நவம்பர் 22, 2024 8:41 மணி

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி..

புதுக்கோட்டை

விரைவில் திறக்கப்படும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்மருத் துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ்  இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிகழாண்டி லேயே அந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கடலூரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கல்லூரிகளிலும் தலா 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

கடந்த  அதிமுக ஆட்சியில்  மூன்றாவது மருத்துவக் கல்லூரியை விருதுநகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ் கல்வியாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் (டிசிஐ)  தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. கடந்த மாதம் கவுன்சில் அதிகாரிகள்  புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்,

இந்நிலையில், அங்கு 50 பிடிஎஸ் இடங்களுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதனடிப் படையில்,  நிகழாண்டில் நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறவுள்ள மருத்துவக் கலந்தாய்வின் போது இந்த இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 63 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி  அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் முயற்சியில் புதுக்கோட்டை யில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முள்ளூர் ஊராட்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 63 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதன் மூலம் கல்லூரி வளாகம் வகுப்பறைகள், மருத்துவமனை, மாணவர் விடுதிகள், முதல்வர் உள்ளிட்ட நிர்வாக அறைகள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த நிலையில் தேசிய மருத்துவக் குழுமம் இந்தக் கல்லூரி யில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, நிகழாண்டிலேயே மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதையடுத்து வெகு விரைவில் இக்கல்லூரியின் திறப்பு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top