Close
நவம்பர் 22, 2024 1:14 மணி

கவிக்கோ அப்துல் ரகுமான்… நினைவலைகள்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

கவிகோ அப்துல் ரகுமான் நினைவலைகள்

சிலருக்கு தன் கம்பீரத்தை, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்தோ, வளைந்து கொடுத்தோ திரைப்படம் மூலம் வரக்கூடிய அதீத புகழ், பாராட்டு, பணம் இவற்றைத் தேடிப் பெறுவதில் ஆர்வம் இருக்காது.

அப்துல் ரகுமானுக்கு கூட அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். அதனால் தான் அவர் சினிமாவுக்கு பாட்டு எழுதவில்லை. சினிமாத் துறை என்பது ஒரு விதமான தனி உலகம்.

‘ஈகோ’க்கள் அதிகமாக புழங்கும். பிரபலமான கவிஞராக ஒருவர் வெளியுலகில் ஏற்கப் பட்டிருந்தாலும், சினிமாவில் நுழைந்து பாட்டெழுத வேண்டுமென்றால், தம் சொந்த ஈகோவை சுருட்டி வைத்துவிட்டு, திரைத் துறையில் உள்ள பெரிய தலைகளுக்கு கொஞ்சமேனும் வளைந்து கொடுத்தாக வேண்டும், படைப்புகளில் சமரசம் செய்தாக வேண்டும். கால நேரமின்றிக் காத்திருத்தல், அலட்சியம், அவ மரியாதை இவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

ஒரு கவிஞர் அவருடைய எண்ண ஓட்டங்களை, அவர் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்தி கொள்ளலாம். ஆனால் சினிமாப் பாட்டு எழுதுபவர்களுக்கு திரைப்பட இயக்குனர் பாடல் வரும் சூழலை விளக்க, அதற்கு ஏற்ற ஒரு இசையை, இசையமைப்பாளர் பாடியோ, வாசித்தோ காட்ட, அதைக் கேட்டுவிட்டு அந்த சூழலுக்குப் பொருந்தக் கூடிய வரிகளை கவிஞர் அந்தக் கணத்தில் தந்தாக வேண்டும்.

இது சாமானியமான ஒரு திறமை அல்ல. அப்படி சில நொடிப்பொழுதுகளில் ஒருவர் ஒரு கவிதையை வெளிப்படுத்தும் போது, அது கவித்துவம் மிக்க வரியாய் எப்போதும் அமையாது. அதுவே யதார்த்தம். அதையும் மீறி பல சினிமா பாடலாசிரியர்கள் அற்புதமான வரிகளை தந்துள்ளனர் என்பது வேறு.

கவிக்கோ அப்துல் ரகுமான் சினிமாவுக்கான பாடல்வரிகளை எழுத மறுத்தது அவருடைய விருப்பம். அதற்காக அம்மி கொத்த சிற்பி எதற்கு என்று கேட்டது அதிகபட்சம்.

கவிஞருக்கு சிற்பம் வடிப்பதே ஆசை என்றாலும் அது இசையமைப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் அமர்ந்து உருவாக்கி எல்லாரையும் திருப்திப் படுத்த முயலும்போது வெறும் அம்மி கொத்துவதாக முடிவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அவர் நினைத்திருக்கலாம். பிள்ளையார் பிடிக்க, அது குரங்காய் முடிந்து விடுமோ என்கிற ஐயமும் இருந்திருக்கலாம்.

மு.மேத்தா போன்ற சில கவிஞர்கள், பல படைப்புகளை படைத்துக் கொண்டே சினிமாவுக்கும் பாடல்கள் எழுதியுள்ளனர். எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் பிள்ளையாரை மட்டும் பிடிக்க போவதில்லை .., பிள்ளையாரை விடக் குரங்கை கூட பிடித்து போகலாம்!

சிற்பங்களை செதுக்குகிற ஒருவரால் எளிதாக அம்மியும்
கொத்த முடியும். ஆனால் அது தமக்கு சரிப்படவே படாது என்று நினைக்கும் ஒருவர், அம்மி கொத்தப் போகாமல் ஒதுங்கி இருக்கலாம். அது திறமைக் குறைவினால்தான் என்று எடை போட்டுவிடக் கூடாது. அப்படித் தான் நாம் அப்துல் ரகுமான் எடுத்த முடிவை பார்க்கிறோம்.

சினிமா பாடல்களை தராவிட்டாலும், பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர் கவிக்கோ. அந்த தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி ஒரு தேர்ந்த வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டவர்.

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். இருப்பினும் வானம்பாடிக்கவிதைக் குணத்திலிருந்து முற்றிலும் வேறானவன் என்ற பிரகடனத்தோடு புதுக்கவிதை வானில் அறிமுகமானவர்.

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top