Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

ஒடிசா ரெயில் விபத்து: சிகிச்சைக்கு ரத்ததானம் அளிக்க குவிந்த இளைஞர்கள்

ஒடிசா

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் அளிக்க திரண்ட இளைஞர்கள்

ஒடிசா ரெயில் விபத்தில், பலர் பலியாகி உள்ள நிலையில். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி வெளியானது. இதனை அறிந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானம் செய்வதற்காக  வரிசையில் திரண்டு நின்றது அனைவரையும்  நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரெஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இளைஞர்கள் ரத்த தானம்…விபத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவை ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். மீட்பு பணியில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை குழு உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் விபத்து நேர்ந்த காரணத்தால் மீட்பு பணிகள் சவாலாக இருந்தது.

சுமார் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிக்காக களமிறக்கப் பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர்.

குறிப்பாக இளைஞர்கள் பலர் விடிய விடிய ரத்த தானம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், உள்ளூர்வாசிகளின் மனித நேயத்தை பலரும் நெஞ்சுருக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top