Close
நவம்பர் 24, 2024 7:53 மணி

சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே தொடங்கியது சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை

சென்னை

எம்.வி.எம்பிரஸ் என்ற சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பலை திங்கள்கிழமை சென்னையில் தொடங்கி வைத்த மத்திய துறை முகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால். தொடக்கி வைத்தார்

சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார்.

சென்னையிலிருந்து இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் எம்.வி.எம்பிரஸ் என்ற சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பலை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால் திங்கள் கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்:

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதை துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள சென்னை துறைமுக பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.  அப்போது இப்பள்ளியில் பயிலும் சுமார் 450 மாணவ, மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.

பின்னர்  கடந்த நிதியாண்டில் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் சிறப்பாக செயல்பட்டு துறைமுகங்களின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு காரணமாக இருந்த தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கேடயங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் சோனாவால் வழங்கினார்.

சொகுசு கப்பல் தொடக்கம்:
இதனையடுத்து சென்னை துறைமுகத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில்  சென்னை,  இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்கள் இடையே பயணிக்கவுள்ள எம்.வி.எம்பிரஸ் என்ற சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பலை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முறைப்படி தொடக்கி வைத்தார்.

இக்கப்பல் கால இடைவெளியின்றி தொடர்ந்து இயக்கப்படும். தொடர்ச்சியாக சொகுசு சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்குவது என்பது சென்னை துறைமுக வரலாற்றில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகளின் சேவையை கருத்தில் கொண்டு சென்னை துறைமுகத்தில் ரூ.17 கோடி செலவில் பல்வேறு அடிப்படை வசதிகள் கொண்ட நவீன பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சுமார் 3,000 பயணிகளை இம்முணையத்தில் மூலம் கையாள முடியும் கடந்த நிதி ஆண்டில் சுமார் 4 மாதங்கள் இயக்கப்பட்ட தனியார் சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் 37 முறை இயக்கப்பட்டு சுமார் 85 ஆயிரம் பேர் கப்பலில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2, 500 மரக்கன்றுகள் நடவு:
துறைமுகங்களை பசுமைத் துறைமுகங்களாக மாற்றும் வகையில் மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தை அமைச்சர் சோனோவால் தொடக்கி வைத்தார். சென்னைத் துறைமுகத்தில் சுமார் 2 ஆயிரம் மரங்களும், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சுமார் 500 மரங்களும் விரைவில் நடவு செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், எண்ணூர் காமராஜர் துறைமுக பொது மேலாளர் சஞ்சய்குமார் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்னடனர் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top