Close
நவம்பர் 25, 2024 11:06 காலை

புத்தகம் அறிவோம்… வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்-வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்

ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி, பணி நிறைவுபெற்ற நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆற்றிய 16 பேருரைகளின் தொகுப்பே ” வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்.”

“வாழ்க்கை ஒரு சவால்
சந்தியுங்கள்!
வாழ்க்கை ஒரு சாகசம்
சாதியுங்கள்!
வாழ்க்கை ஒரு சரித்திரம்
உருவாக்குங்கள்!
வாழ்க்கை ஒரு அழகு;
ஆராதியுங்கள்!
வாழ்க்கை ஒரு இலட்சியம்;
அடைந்துவிடுங்கள்!
வாழ்க்கை ஒரு வரலாறு
படைத்துவிடுங்கள்!”

இவைகள் விவேகாநந்தர் இளைஞர்களுக்கு இட்ட ஆணைகள். இவைகள் தான்,தன்னை பேச்சாளனாக ஆக்கியது என்றும், நெறி தவறாத நீதியரசன் என்ற பெயரை பெற்றுத் தந்தது என்றும் குறிப்பிடும் நீதியரசர், மேற்கண்ட தலைப்புகளில் பல்வேறு இடங்களில் உரை ஆற்றியிருக்கிறார்.அவைகளை வானதி நூலாக்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இது.

நேரு, ராதாகிருஷ்ணன், திரு.வி.க., அண்ணா போன்றவர் களின் மேடைப் பேச்சுக்கள் நூலாக வெளிவந்துள்ளது. அவைகள் இலக்கியமாகவும் போற்றப்படுகிறது. அந்தவகையில் வைக்கத்தக்கது தான் இந்த மேடைப் பேச்சுகளின் தொகுப்பும். இந்நூலில் உள்ள தலைப்புகளில் சில..
நினைத்ததை முடிப்பவள் பெண், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.படிப்பு முக்கியம் – அதை விட பண்பாடு முக்கியம்.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தே னே.திருந்தி வாழுங்கள் சாதிக்க முடியும்.படியுங்கள்! படியுங்கள்! படித்துக் கொண்டே இருங்கள் நல்லதையே செய்வோம் நல்லதே நடக்கும் புன்னகைதான் பொன்னகை.  இந்த தலைப்புகளே உத்வேக மூட்டக் கூடியதாக இருக்கிறது.

“படிக்கின்ற பழக்கமில்லாதவர்கள் இந்த உலகத்தினுடைய அனாமதேயங்கள். நண்பர்கள் கூட உங்களை ஏமாற்றிவிட்டுப் போய்விடலாம். நண்பர்கள் எப்போதுமே உங்கள் பக்கத்தில் இருக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் புத்தகங்கள் எப்போதுமே உங்கள் பக்கத்தில் இருக்கும்.” என்று புத்தக வாசிப்பின் அவசியம் பற்றி படியுங்கள்!படியுங்கள்!..உரையில் குறிப்பிடுகிறார்.

நூலை வாசிக்கும்போது நீதியரசரே நம் முன்னே நின்று உரையாற்றுவது போல் இருக்கிறது ஒவ்வொரு உரையும்.
பல இடங்களில் விவேகாநந்தரே நேரடியாக நம்முன்னே பேசுவது போல அவருடைய செய்திகளை நமக்குத் தருகிறார் நீதியரசர்.வானதி வெளியீடு.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top