புதுக்கோட்டை நகராட்சி 32 வது வார்டு காந்தி நகரில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள தெரு விளக்குகள் ஒரு மாத காலமாக எரியாததால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் முடங்குப் போகும் நிலை கடந்த 20 நாள்களாக நீடிக்கிறது.
புதுக்கோட்டை நகராட்சியின் 42 வார்டுகளில் சுமார் 8 ஆயிரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பராமரிப்பில் இருந்த தெருவிளக்குகள் பராமரிப்பு பணி கடந்த 2016 -ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி 32 வது வார்டில் உள்ள காந்தி நகர் 7, 8 -ஆம் வீதிகள் மற்றும் புதுக்குளத்திலிருந்து திருக்கட்டளை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியாததால் அப்பகுதி மக்கள் இரவில் அச்சத்துடன் அப்பகுதியில் நடமாட வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் காந்திநகர் கிளை நிர்வாகிகள் கூறியதாவது: தெருவிளக்குகள் எரியாத நிலை குறித்து இந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஜெயா கணேசனிடம் தகவல் கூறினோம். அவரும் நகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், விரைவில் தெரு விளக்குகள் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால், ஏறத்தாழ 20 நாள்களைக் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி நிர்வாகத்தின் கை வசம் பராமரிப்புப்பணிகள் இருந்த போது நகர் மன்ற உறுப்பினர் கள், பொதுமக்களின் இது போன்ற குறைகளுக் கான குரலுக்கு உடனடியாக செவி சாய்க்கும் நிலை இருந்தது.
ஆனால், தற்போது தனியார் வசம் சென்றுவிட்டதால், பல்வேறு காரணிகளால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழா கண்ட நகராட்சி என்ற பெருமைக்குரிய புதுக்கோட்டை நகராட்சியில் இந்த நிலைமை நீடிப்பதால் மக்களின் அதிருப்தியில் உள்ளனர். எனவே இப்பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருட்டில் தவிக்கும் பொது மக்களுக்கு வெளிச்சம் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காந்திநகர் கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்