Close
ஏப்ரல் 3, 2025 11:35 மணி

புத்தகம் அறிவோம்… அப்பா..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. அப்பா...

ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபாலின் வேண்டுகோளை ஏற்று, கிட்டதட்ட 1000 மேற்பட்ட கோப்புகளை ஆய்வு செய்தும், அவருடைய குடும்ப உறுப்பினர்களோடு உரையாடியும் ,100 க்கணக்கான ஜி.டி.நாயுடுவை நன்கு அறிந்தவர்களைச் சந்தித்து, உரையாடி, (மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் உட்பட ) தகவல்களைச் சேகரித்தும், கோபால் தன் அப்பாவைப் பற்றிச் சொல்வதுபோலவே “அப்பா” என்று தலைப்பிட்டு சிவசங்கரி எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

23.3.1893 ல் கோவைக்கு அருகில் உள்ள கலங்கல் கிராமத்தில் பிறந்து, Edison of India, Wealth creator of Coimbatore, என்றெல்லாம் அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு – ஜி.டி.நாயுடு – ஜனவரி 4 1974ல் தனது 81வயதில் கோவையில் மறைந்தது வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றை, புதிய கண்டுபிடிப்புகளை,உருவாக்கிய தொழிற்சாலைகளை, சம்பாதித்த செல்வத்தை, சந்தித்த மனிதர்களைப் பற்றியெல்லாம் ஒரு நாவல் போல எழுதியிருக்கிறார் சிவசங்கரி.

தமிழ்நாட்டில் முதல் பாலிடெக்னிக் கல்லூரி யை உருவாக்கியது, முதல் மின்சார முகச்சவரம் செய்யும் கருவியை உருவாக்கியது அதை இந்தியாவில் தயாரிக்க அனுமதி கிடைக்காததால் முன்பு கேட்டு மறுத்த அமெரிக்க நிறுவனத்திடமே தயாரிப்பு உரிமையை இலவசமாகக் கொடுத்தது.

முதலில் வாக்கு இயந்திரத்தை கண்டுபிடித்தது.
200 பேருந்துகள் ஓடிய காலத்தில் வெளிநாட்டில் சர்வர் வேலை பார்த்தது என்று பலவேறு அரிய தகவல்களை இந்த நூலில் பதிவிட்டிருக்கிறார் சிவசங்கரி. “எதையும் பரிசோதனை செய்து பார்ப்பதில் என் தந்தைக்கு ஆர்வம் அதிகம்.என் தலையைக் கூட பரிசோதனைக்கு பயன்படுத்தியிருக்கிறார் “என் தந்தை என்கிறார் கோபால்.

எப்படி? தினமும் தலையில் ஒரு இடத்தில் லேசாக. குட்டு வாராம். தொடர்ந்து அதே இடத்தில் குட்டினால் காலப்போக்கில் தலையில் எப்படி அடிப்பட்டாலும் வலிக்காது என்று சொல்வாராம். சோதனையும் நடைபெற்றிருக்கிறது (பக்.46).
இது, ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல மிகச் சிறந்த தன்னம்பிக்கை நூலும்கூட. சிறுவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்.”நாயுடுவை ஒருவிதத்தில் புதுமைப் புரட்சிக்காரர் என்றுகூடச் சொல்லலாம். இந்தியாவின் முன்னேற்றம் தொழில்ரீதியாக வளர வேண்டும் என்பதில் முன்னோடியாக இருந்தவர். ” என்கிறார் ஆர். வெங்கட்ராமன் (பக்.163).

“எத்தனை தரம் சந்தித்தாலும் மறுபடியும் பார்க்க மாட்டோமா என்கிற ஆவலைத் தூண்டும் நபர்.அவரிடம் விவரிக்கத் தெரியாத கவர்ச்சி இருந்ததாகவே நான் நினைத்தேன். ஒரு தரம் தேள் கொட்டின பையன் ஒருவனை அழைத்து வந்தார்கள்.’படு’ என்றார் நாயுடு படுத்தான். அவனைத் தடவிக்கொடுத்து ‘தூங்கு’ என்றார். ஒரு நிமிடத்தில் பையன் வலி தெரியாமல் தூங்கிவிட்டான். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது” என்கிறார் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர்கள் வேணுகோபால். (பக். 164).

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top