Close
நவம்பர் 22, 2024 4:05 காலை

புத்தகம் அறிவோம்… தேவதாசி மரபு…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

‘தேவதாசி’ என்ற வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் அந்த மரபை ஒழிக்கப் பாடுபட்ட இந்தியாவின் முதல் மருத்துவப் பட்டதாரி, புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலெட்சுமி  அம்மையார்தான்.

அதே போல் தேவதாசி என்ற வார்த்தை கேட்டவுடன் நமக்கு அந்த மரபில் வந்த பெண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமே முதலில் காட்சி தரும். ஆனால் அந்த சமூகம் கலைக்கும், இறைப்பணிக்கும் ஆற்றிய சேவையும்,தியாகமும் பெரும்பாலோருக்குத் தெரியாது.

தன்னையே எரித்துக்கொண்டு ஒளியை வழங்கும் மெழுகுவர்த்தி போல் தேவதாசிகள் தங்களை அழித்துக் கொண்டு கலைகளை வளர்த்திருக்கிறார்கள். இன்று இருக்கும் பரத நாட்டியம் அவர்கள் விட்டுச் சென்ற கொடை. இப்படி மறைக்கப்பட்ட தேவதாசிகளின் இன்னொரு உண்மையான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நூல்.

‘தேவதாசி மரபு’, சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் அவர்களால் பாராட்டப்பட்ட , பி.எம்.சுந்தரம் அவர்களால் ஆங்கிலத்தில் ஆற்றப்பட்ட உரையின் நூல் வடிவம். இதை மொழியாக்கம் செய்தவர் மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் தமிழகத்தின் சிறந்த வரலாற்றாசிரியர் இரா.சுப்பராயலு .

இந்நூலில் தேவதாசி மரபின் தோற்றம், பொட்டுகட்டுதல், கோயில் பணி, தேவதாசிகளின் பண்பு நலன்கள், இசைக்கும் இறைப்பணிக்கும் ஆற்றிய பணிகள், தியாகச் செயல்கள், அவர்களின் உரிமைகள், அவர்களில் புகழ் பெற்ற பெண் மணிகள், தேவதாசிகள் மரபை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள், ஒழிக்கப்பட்ட விதம் யாவற்றையும் ஆய்வு பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.

இந்த மரபை ஒழிக்க மூவாலூர் ராமமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமிஅம்மையார்  இவர்களுக்கு முன்பு முதலில் கச்சைகட்டியவர் 1892 -ல் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேய பெண்மணி மேடம் டென்னர் என்று இந்நூலில் ஒரு குறிப்பு உள்ளது.

காலங்காலமாக வழக்கத்தினுள்ள நடைமுறையிலும் நீண்டகால மரபிலும் தான் கை வைக்க தயாராக இல்லை என்று அன்றைய வைஸ்ராய் மறுத்துவிட்டதால் டென்னர் முயற்சி தோல்வி அடைந்தது. தீரர் சத்தியமூர்த்தி மட்டும் இம்மரபு ஒழிப்பதை எதிர்த்தார் என்று பொதுவான கருத்து.

ஆனால் 1942 -ல் இது தமிழக சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது டாக்டர் சுப்பராயன  இந்த பண்பாடு நூற்றுக் கணக்கான தலைமுறைகளாக, பாண்டியர், சோழர், சேரர், பல்லவர் காலம் முதல் நம் நாட்டில் இருந்து வருகிறது.

இந்த சட்ட முன்வடிவு (டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்தது) நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டு, நம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் வேரை வெட்டி வீழ்த்தி விடக் கூடாது. சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்களை அழித்துவிடக்கூடாது’ என்று பேசியிருக்கிறார்.

தேவதாசிகளை ஒழிக்கும் முயற்சிகளை, பெங்களூர் நாகரத்தினம்மா போன்றவர்கள் நடத்திய சென்னை தேவதாசிகள் சங்கம் எதிர்த்திருக்கிறது போன்ற செய்திகளும் இந்நூலில் பதிவாகியுள்ளது. ‘இன்று தேவதாசி மறக்கப்பட்டுவிட்டாள்.

ஆனால் அவள் விட்டுச்சென்ற புகழ்பெற்ற கலை வாழ்கிறது; எல்லா திசைகளிலும் அவளுடைய பெருமைகளையும், புகழையும் தனிச்சிறப்பையும் பறைசாற்றிக் கொண்டிருக் கிறது’ என்று நூலாசிரியர் இறுதி வரிகளாக இந்நூலில் எழுதியுள்ளார். மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு.98424 91204.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top