20 -ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும், சிந்தனைப் போக்கிலும் அடி முதல் முடி வரை முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார்.
அவரை ஒரு கவிஞர் என்பதாகவும், கவிதையில் புதுப் பாதை உருவாக்கியவர் என்பதாகவும் அறிந்திருக்கிற பலருக்குக் கட்டுரை இலக்கியத்திலும், கதைப் படைப்பிலும் அவர் வியப்பூட்டும் சாதனைகளைப் புரிந்திருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
அவற்றைத் தேர்ந்தெடுத்துப்படிக்க நேரமும் வாய்ப்பும் இல்லாதவர்களுக்குப் பயன்படும் நோக்கில் இக்கட்டுரைத் தொகுப்பு-மகாகவி பாரதியார் கட்டுரைகள்-அமைகின்றது என்று இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தனும் , சிற்பி பாலசுப்பிரமணியமும் முன்னுரையில் குறிப்பிடுகின்றனர்.
சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கும் இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இருவருமே தமிழின் மிக முக்கிய ஆளுமைகள். ஒருவர் சிறுகதை, நாவலில் தடம் பதித்தவர். மற்றவர் கவிதை , மொழிபெயர்ப்பு, ஆய்வு மூன்றிலும் முத்திரை பதித்தவர்.
தேசியம், தத்துவம், பெரியோர்கள், பெண்ணியம், கல்வி,
சாதியம் , கலையும் கவிதையும், தமிழும் தமிழ்நாடும்,பொரு ளும் தொழிலும்,மலையாளம், சிந்தனைச் சித்திரங்கள் என்று 11 தலைப்புகளில் 67 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
முதல் கட்டுரை ‘இந்தியனாகப் பிறந்திருப்பதே பாக்கியம்”தீரா! நீ இந்தியனாக ஜனமெடுக்கலானதை அதிக கௌரவாக நினை… இந்தியர்கள் எல்லாரும் என் சகோதரர்கள். இந்தியர்கள் வணங்கும் தெய்வங்களே என் குல தெய்வம் .நான் பிறந்ததும், வளர்ந்ததும் இந்தியாவிற் குள்ளேதான். வாழ்ந்ததுவும் அத்திருக் கூட்டத்திலேயே. கடைசி காலத்தில் காட்டிற்குச் சென்று இறக்க ஆசை கொள்ளுவதும் அம்மகா ஜன சமூகத்திலேயே ” என்று அபரிமிதமாக கூவு” என்று ஒவ்வொரு இந்தியனுக்கும் கட்டளையிடுகிறார் பாரதி.
பெண்ணியம் தலைப்பிலான கட்டுரைகளில் இந்துப் பெண்களின் நிலை மட்டுமல்ல, பெளத்த, இஸ்லாமிய பெண்கள் நிலை பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
“சுத்தமாக ஸ்நானம் செய்துவிட்டுத்தான் கோயிலுக்குள் வரலாமென்று ஏற்படுத்தினால், அது நியாயம்.
அப்படிக்கில்லாமல் நிஷ்காரணமாகப் பதினாயிரக்கணக் கான நமது சகோதர்களை நாம் கோயிலுக்குள் வராமல் தடுத்து வைத்தால் அவர்கள், கிருஸ்தவம், மகமதியம் முதலிய அந்நிய மதங்களில் சேர்ந்துவிடுவார்கள் ” என்று எச்சரிக்கிறார் பாரதி” கோயில் திருத்தம்” என்ற கட்டுரையில்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புதிய அனுபவத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக் கூடிய அளவிலான கட்டுரைகளாகத் தொகுப்பாசிரியர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வரும் ஜூலை இறுதியில் தொடங்கவிருக்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சாகித்திய அகாதெமியும் இடம் பெறும். வாங்கி வாசிக்கலாம்.
…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..