Close
நவம்பர் 22, 2024 6:19 காலை

கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் தலித் மக்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

புதுக்கோட்டை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோயிலில் வழிபாடு உரிமை கேட்டதால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்துள்ளது விராச்சிலைக் கிராமம். இங்குள்ள ஸ்ரீமது அடைக்கலம் காத்தார் அம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காலம்காலமாக தலித் மக்கள் உள்ளி;ட்ட அனைத்து சமூகத்தினருக்கும் வழிபாட்டு உரிமை இருந்து வந்துள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் கோயில் திருவிழாவின் போது ஒவ்வொரு கடமைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தலித் மக்களுக்கான கடமையை செய்ய விடாமல் சாதி ஆதிக்க சக்தியினர் தடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கோயிலில் தங்களுக்கான கடமையைச் செய்யவும், வழிபாடு உரிமையைப் பெற்றுத்தரவும் கோரி பட்டியல் இன மக்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், விராச்சிலை ஸ்ரீமதி அடைக்கலம்காத்தாள் அம்மாள் கோயில் திருவிழாவிழாவின் 10-ஆம் நாள் திருவிழா கடந்த ஜூன் 14 அன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட தலித் மக்களை சில சாதிவெறியர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(25), பிரசாத்(19), பாரதிராஜா(21), மோகன்(21), ஜெகதீஸ்(19), ஆண்டியப்பன்(63), சின்னம்மாள்(75) ஆகியோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

தீண்டாமைஒழிப்பு முன்னணி கண்டனம்

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலளார் சி.ஜீவானந்தம் ஆகியோர் கூறியதாவது:  விராச்சிலையில் நடந்துள்ள சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல் ஆகும்.

பட்டியில் இன மக்களுக்கு உரிய வழிபாட்டு உரிமையையும், கோவிலில் காலம் காலமாக அவர்கள் செய்துவந்த பணியையும் பெற்றுத்தருவதும் அரசின் கடமையாகும். இதை உறுதி செய்யும் அதே நேரத்தில், பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top