Close
நவம்பர் 22, 2024 12:32 மணி

அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது

ஈரோடு

பெருந்துறை தொகுதியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது  என்றார்  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் கே.சி. கருப்பண்ணன்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் பழைய உறுப்பினர் புதுப்பித்தல், புதிய கூடுதல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை மற்றும் துடுப்பதி ஆகிய இடங்களில்  திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.  பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ்,, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. சி. கருப்பண்ணன்  உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கி பேசியதாவது:  கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு சாதனைகளை புரிந்தார். அவரது ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருந்தனர். ஆட்சிக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படவில்லை.

ஈரோடு
பெருந்துறை தொகுதி அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஸ்டாலின் ஆட்சி பல்வேறு கெட்ட பெயர்களை சம்பாதித்துள்ளது. தற்பொழுது மக்கள் ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று  வருந்தும் நிலையை பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

அதிமுக இன்னும் வலுவாக வேண்டும் என எடப்பாடியார் கருதுகிறார். அதனால் தான் தற்பொழுது உறுப்பினர் சேர்க்கை முடிக்கி விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு அதிமுகவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெருந்துறை தொகுதியில் 2:15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே 75 ஆயிரம் பேரை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் வரும் 23 -ஆம் தேதிக்குள் சேர்க்கப்படும். உறுப்பினர்கள் அனைவருக்கும் அழகான அடையாள அட்டை வழங்கப்படும்.  26  -ஆம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை படிவங்களை சமர்ப்பிக்கலாம் . அதற்கு கட்சி நிர்வாகிகள் முழுமையாக பாடுபட வேண்டும்.

அதேபோன்று ஒவ்வொரு பூத்திலும் 75 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில் 25 பேர் மகளிர் 25 பேர் இளம்பெண்கள் இளைஞர்கள்பாசறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் தான் வரும் தேர்தலின் போது ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் பணியாற்ற முடியும். நமது வெற்றி வாய்ப்பு சுலபமாகும் என்றார் கே.சி.கருப்பண்ணன்.

கூட்டத்துக்கு, மாவட்ட அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. பொன்னுதுரை, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், கருமாண்டிசெல்லி பாளையம் பேரூர் செயலாளர் கே. எம். பழனிசாமி, காஞ்சி கோயில் பேரூர்  செயலாளர் சிவசுப்பிரமணியம், பள்ளபாளையம் பேரூர் செயலாளர் கமலக்கண்ணன். பெத்தாம்பாளையம் பேரூர்  செயலாளர் பூபாலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பண்ணன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட  நிர்வாகிகள்,பெருந்துறை வடக்கு ஒன்றிய  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top