புதுக்கோட்டையில் ஜூலை மாதம் நடைபெற்றவுள்ள 6 வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான, வரவேற்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து (ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை) 10 நாட்கள் நடத்தவுள்ள புத்தகத் திருவிழாவிற்கான, வரவேற்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் (22.06.2023) நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் 6 -ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.
மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழி வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து ரூ.3 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொதுஇடங்களில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற மாபெரும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில், பள்ளிக்கல்வித்துறை, கல்லூரிகள் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது நூலகத்துறை, மருத்துவத்துறை, நகராட்சித்துறை, காவல்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தவுள்ள, 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று அதிக அளவிலான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து வரவேற்றார். கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழா அனுபவங்கள் குறித்து கவிஞர்தங்கம்மூர்த்தி, வாசிப்பின் அவசியம் குறித்து ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் கருணாகரன், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார், புத்தகத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து கவிஞர் நா. முத்துநிலவன், அரங்குகள் மற்றும் பதிப்பகங்கள் குறித்து மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகப்பணிகள் குறித்து அ.மணவாளன் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முகஉதவியாளர் கே.ராசு, மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) தமிழ்செல்வி ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை இயக்குநர் கவிதப் பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ராசி பன்னீர்செல்வன், கீதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார் நன்றி கூறினார்.