Close
நவம்பர் 21, 2024 11:54 மணி

பார்வைத்திறன்- செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளிகளில் ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை

மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை  மாவட்ட  ஆட்சியர் மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளில், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை  (23.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகள் பிரெய்லி உபகரணத்தின் மூலம் தமிழில் எழுதுவதையும், பிரெய்லி முறை மூலமாக எழுதப்பட்டதை வாசிப்பதையும், கல்வி கற்கும் முறையினையும், பிரெய்லி முறை மூலமாக கணினியை மாணவர்கள் பயன்படுத்தி தட்டச்சு செய்வது குறித்தும் ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பள்ளியில் பயின்றுவரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களின் வகுப்பு நிலைக்கேற்ப கற்றல் திறன்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆசிரியர் களிடம் கேட்டறிந்து, பார்வை குறைபாடுடைய மாணவர்கள் அதற்கான உபகரணத்தின் மூலம் இசை கற்று வருவது குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், சமையல்கூடம், உணவு அருந்தும் அறை, வகுப்பறைகள் உள்ளிட்டவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மாணவர்களின் விளையாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு மாணவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனரா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து செவித்திறன் குறைபாடுடை யோருக் கான உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற  ஆட்சியர், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் நேரடியாக சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் அவர்களின் கற்றல் திறன்கள் குறித்தும், சைகை மொழி மூலமாக மாணவ, மாணவிகள் பேசுவது, பாடங்களை படிப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி, எழில்நகர் பகுதியில் செயல்பட்டுவரும் மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான ப்ளாசம் சிறப்பு பள்ளியினை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி முறைகள் குறித்தும் ஆட்சியர் மெர்சி ரம்யா  கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.எஸ்.உலகநாதன், பார்வைத்திறன் குறைபாடுடை யோருக்கான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top