Close
செப்டம்பர் 20, 2024 8:30 காலை

வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: எம்பி ஜோதிமணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழாவில் பங்கேற்ற கரூர் எம்பி ஜோதிமணி

இளம் தலைமுறையினர் நமது நாட்டின் வரலாற்றுப் பெருமைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

இந்திய அரசின் புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 23.06.2023  நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார்.

சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் சோனா சிங்காரம் முன்னிலை வகித்தார். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடக்கி வைத்து  பேசியதாவது:

இளம் தலைமுறையினர் நமது நாட்டின் வரலாற்றுப் பெருமைக ளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் புதிய வரலாற்றினை நம்மால் படைக்க முடியும்.

அதற்கு மன உறுதி மிக்க, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி, குறைந்த படிப்பிலும் நிறைந்த அறிவும் கொண்டிருந்த காமராஜர் போன்றோரை நாம் முன்னோடியாக மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் ஜோதிமணி எம்பி.

நாட்டின் வளர்ச்சி, அடிமை மனோபாவத்தை நீக்குதல் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்தல் நாட்டு மக்களிடையே ஒற்றுமை மற்றம் குடிமக்கள் தனது கடமைகளை உணர்தல் எனும் ஐந்து உறுதிமொழிகளை தலைப்புகளாகக் கொண்டு, கவிதைப்போட்டி ஓவியப் போட்டி, மொபைல் போட்டோகிராபி போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பாரம்பரிய நடனப் போட்டி ஆகிய ஐந்து வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த சுமார் 220 இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனர். விழாவில் இளையோரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றது.

தொடக்க விழாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி, சுதர்சன் கல்லூரி முதல்வர் வீரப்பன், துணை முதல்வர் ஜெயகௌரி, மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் சதாசிவம் ஆகியோர் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த இளையோரை வாழ்ததினர்.

தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் இளையோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகையில், “மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளே அவர் என்றென்றும் நமக்கு கூறும் செய்தி” எனக் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை
பெருமாநாடு சுதர்சன் கல்லூரியில் நேரு யுவ கேந்திரா கலை விழாவில் பங்கேற்ற மாணவிகள்

தொடர்நது முனைவர் கு.தயாநிதி நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் ஆர். நமச்சிவாயம் சேது கார்த்திகேயன் ஆகியோர் அனைவரையும் பாராட்டிப் பேசினார்கள்.

தொடர்ந்து போட்டி நடுவர்கள், சுதர்சன் கல்லூரியைச் சார்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சுதர்சன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேரா. சுப. முத்தழகன்  வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக நேரு யுவ கேந்திரா அன்னவாசல் ஒன்றிய தேசிய இளையோர் தொண்டர் முத்துமாரி  நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் மணிகண்டன், வாசு, மணிமேகலை, கருப்பையா மற்றும் அகல்யா ஆகியோர் இணைந்து  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top