Close
நவம்பர் 22, 2024 6:40 மணி

தந்தையர் தினம்… வாழ்க்கையை செதுக்கியது.. அப்பா.. இங்கிலாந்திருந்து சங்கர்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

தந்தையர் தினம்

தந்தையர் தினம்..,

அனுதினமும் கதர் வேஷ்டி சட்டை அணியும் அப்பா..,ஓர் உரைநடையே எழுதி விடும் அளவுக்கு நடை உடையில் நளினம் காட்டும் அப்பா..,

நாளிதழ்களை தவறாமல் காலை பொழுதுகளில் வாசித்த அப்பா..,வாசிப்பு பழக்கத்தை எனக்கு வழமையாக்கிய அப்பா..,

தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து உணவளித்து அனுப்பி வைத்த அப்பா..,கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்
எந்த வயதுடைய நபராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்திய அப்பா..,

பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள், பலதரப்பட்ட வியாபாரிகள் அனைவரிடமும் தொழிலை தாண்டிய தோழமை காட்டிய அப்பா..,

நாலு நல்ல விசயம் தெரிஞ்சுக்க வேணும்னா, நமக்கு நாலு ஜனங்க கூட வேணும்னு சொன்ன அப்பா..,பக்கத்துக்கு வீட்டுகாரங்க, ஊருக்காரங்க எல்லார்கிட்டயும் பாசமா பழகின அப்பா..,

பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொண்டாலும்அது பேருக்கு தானே தவிர சாதி பார்த்து பழகாம, அனைவரிடமும் சகஜமாக பழகிய அப்பா..,

அதிகம் படிக்காத அப்பா அதிகம் படித்தவர்களுக்கு பிடித்தமான அப்பா..,எத்தனையோ பேருக்கு திருமணம் செய்து வைத்த அப்பா..,தன் பிள்ளைகளில் ஒருவரை கூட மணமேடையில் பார்க்காமல் மரணித்து போன அப்பா..

அரசியலில் அரிதாரம் பூசாத அவதாரம் அப்பா..,பதவி பெறுவதில் காட்டும் வீரியத்தை,பலருக்கு உதவி புரிவதில் காட்டிய அப்பா..,

அரசியலை வைத்து பொழப்பு நடத்தாமல்,அரசியல் மூலம் பலருக்கு பொழப்பை தந்த அப்பா..,கட்சி மூலம் பணப்பையை நிரப்பாமல், கட்சிக்காகபணப்பையை காலிப்பண்ணிய அப்பா..,

காச பாத்து யாருகிட்டயும் பழகாமல், நல்ல மனசு இருந்தா போதும்னு வாழ்ந்து காட்டிய அப்பா ….இருக்கிறபோது வழிபாடும் இறந்த பிறகு பழிபாடும் நடக்கிற சமூக சூத்திரத்தை சுட்டெரித்த சூரியன் அப்பா..,

வாழ்ந்து சமாதியானாலும் சமாதியாகியும், வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா..,இப்படியாக அப்பாவின் ஆகச்சிறந்த பங்களிப்பு இதுதான் என்று ஒரு விஷயத்தை மட்டும் கூற முடியவில்லை,

எனது 17 வயது வரை பக்கத்தில் இருந்து பார்த்த அப்பாவின், பலவாறாக வெளிப்பட்ட பரந்த அவரது அணுகுமுறை,என் வாழ்க்கையை செதுக்கியது என்று இன்று என்னால் சொல்ல முடிகிறது..

கனவுகளின் தடங்களில், காண முடியாத உங்களை நினைவு களின் இடங்களில் யோசித்தபடியே நான். அப்பா நீங்கள் இல்லாமல் 36 ஆண்டுகள் கழிந்தது..,இன்று நல்ல மனிதனாக இருக்கின்றேனா அப்பா?! தந்தையர் தினத்தில் உங்கள் பதிலை வேண்டுகிறேன் அப்பா..,

…இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top