Close
செப்டம்பர் 20, 2024 6:39 காலை

புத்தகம் அறிவோம்… காந்தி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“காந்தி”காந்தியைப் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் நூல்களில் இது சிறப்பிடம் பெறுகிறது. இதன் ஆசிரியர் T.D.திருமலை (1921 அக்.26 – 1993 ஆகஸ்ட் 11) ஒரு காந்தியவாதி. காந்திய உணர்வு வழி வாழ்ந்தவர். வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்றவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தவர்.

1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர். அதனால் கல்லூரி படிப்பை முடிக்காதவர். அப்போது தலைமறைவு வாழ்க்கையை சந்தித்தவர். காந்தி அமைதி நிறுவனத்தின் மதுரை மற்றும் சென்னைக் கிளைச் செயலராக பணியாற்றியவர். இறுதிவரை காந்தியவாதியாக வாழ்ந்து மறைந்தவர். ஒரு ரயில் பயணத்தின் போது திருமலை சொல்ல
எஸ்.பாண்டியன் என்பவர் எழுதியது.

சிறிய புத்தகம் என்றாலும் காந்தியைப் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல். “சிறுநூறு பக்கங்களுக்குள் அவரது (காந்தி) பெரிய வாழ்க்கையை அடக்கிக் கூறுதல் எளிமை யானது அன்று. ஆனால் இன்றியமையாத வாழ்க்கைப் பகுதிகளையும் நோக்கங்களையும் விடாமல் இந்நூலில் அவர் தந்துள்ளார். பலரும் கற்றுப் பயன்பெறத்தக்க நூல் இது என்று தனது அணிந்துரையில் கூறுகிறார் மு. வராதராஜன்(மு.வ).

இவர், சுடர்விடுகிறது, ஒளிவீசுகிறது, அன்று, காந்தி வந்தார்,
ஆயத்தமானார், நாட்டை தயார் செய்தார், பின் விளைவுகள்,
படையெடுப்பு, கிருஸ்துமஸ் பரிசு, 1939 -க்குப் பின்,சத்தியா கிரகி காந்தி என்ற 12 வித்தியாசமான தலைப்புகளில் இந்நூலை வரைந்துள்ளர்.

உரிச்சொல் பெயர்ச் சொல்லின் விரோதி என்று தன் ஆசிரியர் சொன்ன கருத்தில் உடன்பாடு கொண்டு, தன்னுடைய தலைவரை மற்றவர்களெல்லாம் மகாத்மா காந்தி என்று அழைத்தாலும் காந்தி என்பதிலே காணும் இன்பம் அதில் இல்லை என்பதை மனதில் கொண்டு இந்த நூலுக்கு காந்தி என்று பெயரிட்டிருக்கிறார் திருமலை.

(அறிஞர் அண்ணா, கலைஞர் என்பதால் அவர்களின் பெயர், முழுப்பெயர் தெரியாமலேயே இன்று பலர் இருக்கிறார்கள்)
இவர் என்ற தலைப்பில் காந்தி யார் என்று சொல்லும்போது “இவ்விருள் சூழ்ந்த நாட்டிலே ( காந்தி பிறந்த தால்) ஒளி பிறந்தது.

வழக்கத்துக்கு மாறான ஒருவழியில் செயல்பட்டார். மனித உள்ளத்தில் உறங்கிக்கிடந்த சிறந்தவனை தட்டி எழுப்பி அவனுக்கும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஊட்டினார். பொதுவாக இந்திய மக்கள் மனிதர்களாக மாறினார்கள்.

சிறப்பாக நாட்டையும் உலகத்தையும் கட்டிக்காக்கும் ஆற்றல் படைத்த மனிதருள் மாணிக்கங்களை உருவாக்கினார். தருமம் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டினார்” என்று எழுதுகிறார் திருமலை.

முதல் வழக்கில் பேச முடியாமல் மயக்கம் போட்டு விழுந்த காந்தி எப்படி உலகம் கவனிக்கும் பேச்சாளராக மாறினார் என்பதை அழகாக விவரித்திருக்கிறார் இந்த நூலில் திருமலை. 1973 ல் முதல் பதிப்பு கண்ட இந்நூல் மீண்டும் காந்தியின் 150 வது பிறந்த ஆண்டில் மறுபதிப்பு கண்டது.
வெளியீடு:ஜலதரங்கிணி ,58 வெங்கட் நாராயணா சாலை.
தி.நகர்,சென்னை-600017.

# பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top